ஹேமு காலானி
ஹேமு காலானி
சுதந்திரத்தின் வீர புதல்வன்
இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள ஸக்கர் நகரில், 1923ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்தார் ஹேமு காலானி. மாபெரும் சுதந்திர போராட்ட புரட்சியாளரான இவர் தனது 19ம் வயதிலேயே பாரதத்தாயின் பாதங்களில் மலராய் அர்ப்பணமானார். இவரது தந்தை பெஸ்சுமல் காலானி அரசு அலுவலகத்தில் எழுத்தராகவும், தாயார் ஜேதி பாய் இல்லத்தரசியாகவும் இருந்தனர். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக இருந்தபோதும், பிற மக்களுக்கு உதவிகள் செய்து எளிய வாழ்வு வாழ்ந்தனர். ஹேமு மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவர். பெற்றோரிடம் மிகுந்த அன்பும் செல்லமும் கொண்டிருந்தார்.
ஹேமு உள்ளூர் அரசுப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவர் நற்குணங்களும் அமைதியான தோற்றமும், எல்லோரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மையும், இனிமையான பேச்சழகும், தன்னடக்கமும் உடையவராக இருந்தார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சேர்ந்து விளையாடுதல், அவர்களுக்கு உதவி செய்தல் இவற்றுடன் ஒரு பிரகாசமான மற்றும் அறிவுள்ள மாணவராக படிப்பிலும் சிறந்து விளங்கினார். வீடு, பள்ளி மற்றும் சமூகம் என அனைவரிடத்தும் உயர்ந்த பண்புகள் மற்றும் ஆளுமைத் திறனை வெளிப்படுத்தினார். பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் இவரை மிகவும் விரும்பினர். குறிப்பாக இவருடைய ஆசிரியர் லால்வாணி என்பவர், ஹேமு சிறந்த மாணவர் என்று அடிக்கடி கூறி வந்தார்.
தனது தாய் மூலம் சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப் சிங் மற்றும் ராஜா தாஹிர்சேன் போன்றோரின் சாகசக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பகத்சிங் மற்றும் சந்திரசேகர ஆசாத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளால் இவர் உத்வேகம் பெற்றார். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்தும் இவர் படித்தார். பல தேசபக்தர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பும், அவர்களுடன் பழகும் வாய்ப்பும் பெற்றிருந்தார்.
ஹேமு தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து, பண்டிகைகள் எல்லாம் மிக அழகாக கொண்டாடியதோடு மட்டுமின்றி சிறந்த அனுமான் பக்தராகவும் இருந்தார். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது தாயிடம் ஆசி வாங்கி செல்வார். அவரும் "மிகச்சிறந்தவனாக புகழ்மிக்கவனாக தேசத்தின் விடுதலைக்கு நீ பாடுபட வேண்டும்" என்று அடிக்கடி ஆசி வழங்கி இருந்தார். அந்த ஆசிகள்தான் எதிர்காலத்தில் அவரை மிகப்பெரிய ஒரு தேசபக்தர் ஆக உயர்த்தியது.
ஹேமு இளம் பருவத்தினராக இருந்தபோதே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கத் தொடங்கினார். சக மாணவர்களுடன் பழகும் போதும் நம்முடைய தேசிய சிந்தனை, தேசிய கடமைகள் என்ன என்பதை அறிந்து வைத்து, தன் சக மாணவருக்கும் சொல்லி வந்தார். இவருடைய ஆசிரியர் லால்வாணியும், ஹேமுவின் சித்தப்பா மங்காரம் காலானியும் சிறந்த தேசபக்தர்கள், காந்தியவாதிகள். ஆகவே அவர்கள் ஆங்கிலேயருடைய கொடுமையை நன்கு அறிந்து வைத்திருந்தனர். ஆங்கிலேயர்களுடைய கொடுமைகளுக்கு எதிராக மக்களை திரட்டி தாய்நாட்டுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று இவர்கள் கருதி இருந்தனர். ஹேமு காலானி தாய்நாடு சொர்க்கத்தை விட உயர்ந்தது என்று கருதி இருந்தார். அது மட்டுமல்ல சிறந்த ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றின் மூலமாகத்தான் உயர்ந்த வாழ்க்கை வாழ முடியும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.
ஸக்கர் பகுதியில் சிறந்த தேசபக்தர்களான மங்காரம் காலானி, ஹரிராம் லிலானி, லட்சுமணதாஸ் கேஸ்வாணி போன்ற தேசபக்தர்கள் தேசபக்தி, வீரம், தன்னலமற்ற இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி “ஸ்வராஜ்ய சேவா மண்டல்" என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இதன் நோக்கம் ஆங்கிலேய அடிமை தளையிலிருந்து தேசத்தை விடுதலை அடைய செய்ய வேண்டும் என்பதாகும்.
அந்த நகரில் தேசபக்தியை ஊட்டி யாரேனும் பத்திரிகைகளில் கட்டுரை எழுதினால் அவர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லட்சுமண்தாசும் இதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்.
மக்களிடையே தேசபக்தியை ஊட்ட வேண்டும் என்ற ஆவலுடன் பேராசிரியர் தாராசந்த், மங்காரம் காலானி போன்ற தேசபக்தர்கள் தேசபக்தி நிறைந்த பாடல்கள், கதைகள், நாடகங்கள் என நடத்தி அதன் மூலம் தேசபக்தியை ஊட்டி வளர்த்தனர்.
நாடு வெள்ளைக்கார வெறியர்களிடமிருந்து முழு சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக ஹிந்து நவ யுவ மண்டல், ஹிந்து சபா, சுந்தர் சபா, ஹிந்துத்துவ பிரச்சார் போன்ற அமைப்புகள் அந்த காலத்தில் இருந்தன. ஆங்காங்கே நூலகங்களும், படிப்பகங்களும் கூட ஏற்படுத்தப்பட்டன.
ஆங்கிலேயர்கள் தங்களை எதிர்த்து, தேச விடுதலைக்காக கருத்துக்களை எழுதும் பத்திரிகையாளரை தண்டிப்பதும், பத்திரிகை அலுவலகங்களை மூடுவதும் வழக்கமாக வைத்திருந்தனர். அவ்வாறு ஹிந்து, கேசரி மற்றும் சில பத்திரிகை அலுவலகங்கள் மூடப்பட்டு, அந்த ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1942ம் ஆண்டு நேதாஜி வானொலியில் உரை நிகழ்த்தினார். அதன் விளைவு மக்கள் வீதியெங்கும் விதேசி துணிகளை எரித்ததோடு மட்டுமின்றி வீடுகளில், தெருக்களில், பள்ளிகளில், என அனைத்து இடங்களிலும் போராட்ட சூழல் உருவானது.
ஹேமு எப்படிப்பட்ட மனத்திண்மை உள்ளவர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், ஒரு நாள் அதிகாலை நேரம். அழகான இயற்கை சூழல் வாய்ந்த இடம். சூரியன் தன்னுடைய பொன் நிறக்கதிர்களை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தான். அப்போது ஹேமு தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ஒரு பெரியவர் பதறிப் போய் அவனை தடுத்து நிறுத்தி "ஏன் கயிற்றில் தொங்குகிறாய்?” என்று கேட்டார்.
இளைஞன் அளித்த பதில்தான் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. “தூக்கு தண்டனை அளித்தபோது, பகத்சிங் போன்ற மாபெரும் தலைவர்கள் சிரித்துக் கொண்டே அந்த தூக்குக் கயிற்றை முத்தமிட்டு மகிழ்ச்சியாக இருந்தனர். இது எப்படி சாத்தியம் என அறிந்து கொள்வதற்கு இந்த மாதிரி ஒரு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்றான். அதைக்கேட்ட பெரியவர் “இந்த விளையாட்டு உனது மன உறுதியைக் காட்டுகிறது என்பது உண்மைதான், ஆனால் எதிர்பாராத விதமாக ஏதேனும் நடந்துவிட்டால் அது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். நீ உன்னுடைய திறமை முழுவதையும் தேசத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
ஒரு முறை ஆங்கிலேய சிப்பாய்கள், காரணம் இன்றி ஒருவரை ரொட்டி திருடியதாக கூறி ரோட்டில் அடித்துக் கொண்டிருந்தனர். அவரை ஏன் உதைக்கிறீர்கள் என ஹேமுவின் தந்தை கேட்டபோது, ரொட்டி திருடியதாக கூறப்பட்டது. உண்மையில் அவர் காசு கொடுத்துதான் வாங்கி இருக்கிறார். இருந்தாலும் ஆங்கிலேயன் வெறித்தனம் கொண்டு அடித்து உதைத்தான். ஹேமுவின் தந்தை அதை தட்டிகேட்டதால், அவரையும் துன்புறுத்தப்பட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
ஆங்கிலேயனின் இச்செயலினால் எல்லோரும் வருத்தப்பட்டு கொண்டிருந்தனர். இதைக் கேள்விப்பட்டு வீட்டிற்கு வந்த ஹேமு, தன் நண்பர்களுடன் சேர்ந்து, ஆவேசமாக காவல் நிலையம் செல்வதை பார்த்த இவருடைய ஆசிரியர் ஜீவித் லால்வாணி இவரை சமாதானப்படுத்தி ஒரு பள்ளியின் விடுதிக்கு அழைத்துச் சென்றார். ஜீவித் லால்வாணி மிகச்சிறந்த தேசபக்தர். சுதந்திரத்திற்காக போராடும் சுயநலம் இல்லாத, தன்னை அர்ப்பணம் செய்யும் வீரர்களை ஒன்றிணைத்து ‘ஸ்ராஜ் மண்டல்' என்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தி இருந்தார்.
விடுதியில் 10-15 இளைஞர்கள் இருந்தார்கள். அதில் ஒரு இளைஞன் ஹேமுவைப் பார்த்து, “இவரை எதற்காக அழைத்து வந்தீர்கள்?” என்று கேட்டபோது, "இவர் பெயர் ஹேமுகாலானி, இவர் உங்களைப் போன்று மிகச் சிறந்த தேச பக்தர். எந்த ரகசியத்தையும் தன்னோடு பாதுகாத்துக் கொள்ளக்கூடிய திறமை உள்ளவர்” என்றார் ஆசிரியர் லால்வாணி. ஆனால் மற்ற சுதேச புரட்சியாளர்களுக்கு சந்தேகம் வந்ததைக் கண்ட ஹேமு காலானி, எரியும் அடுப்புக் கனலில் கை வைத்து, தான் இந்த விஷயத்தில் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
ஸக்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளைக்காரனுடைய அடாவடித்தனம் அலட்சியம், துன்புறுத்துதல், மிக அதிகமாக இருந்து கொண்டிருந்தது. இதனால் தேச பக்தர்கள் எல்லாம் ஒன்றிணைந்து இதை முறியடிக்க வேண்டும் என்று அவ்வப்போது சில கூட்டங்கள் எல்லாம் நடத்திக் கொண்டிருந்தனர்.
ஸக்கரில் குத்துச்சண்டை போட்டி வழக்கமாக நடக்கும். அந்த குத்துச்சண்டை போட்டியில் ஆங்கிலேயர் ஒருவனே ஜெயிப்பது வழக்கமாக இருந்தது. போட்டிகளில் ஒருவர் தோற்பதும் ஜெயிப்பதும் இயற்கைதான். ஆனால் ஜெயித்த வெறிபிடித்த ஆங்கிலேயர் பாரதவாசிகளை தரக்குறைவாக பேசுவதும், பாரதவாசிகள் அடிமைகள் என்று பேசுவதும் மக்களிடையே ஒரு கசப்பு உணவு ஏற்படுத்தியிருந்தது.
இந்த காழ்ப்புணர்ச்சியை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஹேமுவின் நண்பர்கள், “போட்டியில் நீ கலந்து கொள்ள வேண்டும்” என்றனர். ஏற்கனவே பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனுபவம் ஹேமுவிற்கு இருப்பதனால் அவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்.
போட்டி பயங்கரமாக நடந்தது. சிப்பாய்கள் காவல் காத்துக்கொண்டிருந்தனர். கடுமையான போட்டியில் ஆங்கிலேயன் வீழ்த்தப்பட்டான். ஆங்கிலேய நடுவராக இருந்தவர் வேறு வழியின்றி ஹேமுவின் வெற்றியை உறுதிப்படுத்தினார். ஆனால் ஆங்கிலேயர் தங்கள் தோல்வியை சகித்துக் கொள்ள முடியாமல் அங்கு கூடியிருந்த மக்கள் மீது தடியடி நடத்தினர்.
ஆவேசம் கொண்ட ‘மக்கள் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம், ஹேமுவிற்கு ஜெய்’ என்று கோஷம் எழுப்ப, ஆங்கிலேயருக்கும் அப்பகுதி மக்களுக்கும் சண்டைகள் ஆரம்பித்து சூழ்நிலை சற்று மோசமாகியது. பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த விஷயம் ஹேமுவின் மனதை வருடி கொண்டே இருந்தது. அவரை சமாதானப்படுத்தி மீண்டும் விடுதிக்கு அழைத்து வந்தனர்.
தோல்வியை ஏற்க மறுத்த ஆங்கிலேயர், தங்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்தி, கோபத்தால் மக்கள் மீது வெறிகொண்டு விரட்டி தாக்கினர். ஹேமுவும் நண்பர்களும் பள்ளியின் விடுதிக்கு வந்து நடந்த விஷயத்தை தன்னுடைய சித்தப்பா மங்காரம் காலானியிடம் தெரிவித்த போது அவர், “இதற்கு என்ன வழி என்றால் சிந்து பிரதேசத்தில் வீர தீர இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு தேசபக்தியூட்டி, இளைஞர்களிடம் மாற்றம் ஏற்பட்டால், தேசத்திலிருந்து நாம் முழுமையாக ஆங்கிலேயனை விரட்ட முடியும்” என்றார்.
அதன் பொருட்டு 'ஸ்ராஜ் சேவா மண்டலை’ இதற்கு பயன்படுத்த முடியுமா என்று யோசனை செய்த போது, இளைஞர்கள் இப்பொழுதுதான் இதில் இணைந்திருக்கிறார்கள் ஆகவே அவர்களுக்கு இன்னும் அதிகமான பயிற்சி தேவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
"ஒவ்வொருதேசத்தின் மாற்றமும், இளைஞர்களின் மூலமாகத்தான் நடைபெறும் என்பதே வரலாற்று உண்மையாகும்."
இளைஞர்களிடம் தேவையான உற்சாகம், அன்பு, ஒருங்கிணைப்பு, ஆகியவை இருக்கின்றன. மைதானத்தில் இருந்து தோல்வியோடு வெளியேறிய ஆங்கிலேயர் படைகள், வஞ்சம் தீர்க்க வேண்டும் என்பதற்காக அடுத்த நாள் 144 தடை உத்தரவு அறிவித்தனர். கைதுகள் தொடர்ந்தன. கூட்டமோ, ஊர்வலங்களோ, பெரிய தலைவர்களின் மேடைப் பேச்சுகளோ எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது.
“அரசு நமக்கு எதிராக சதிகளை செய்கிறது. ஆகவே நாம் மிகுந்த கவனத்தோடு சிந்தனை செய்து நம்முடைய எதிர்காலத் திட்டங்களை யோஜனை செய்ய வேண்டும்*
டாக்டர் மங்காரம் காலானி, ‘ஸ்ராஜ் சேவா மண்டல்’ இளைஞர்களை ஒன்றிணைத்து, அதில் ஆங்கிலேயனுடைய அடக்குமுறைக்கு எதிராக நாம் போரிடவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தார். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் உரையாற்றிய ஹேமு, “நாம் கோழைகளோ, உயிருக்கு பயந்தவர்களோ அல்ல. ஒன்றிணைந்த திடமான சத்தியை திரட்டி நாம் ஆங்கிலேயருக்கு உணர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார். 'ஸ்ராஜ் சேவா மண்டலின் தலைமையை பொறுப்பை ஹேமு காலானி ஏற்றுக்கொண்டார். அவர் தலைமையில் அவருடைய யோஜனை அடிப்படையில் தேசத்திற்காக போராடுவது என்று இளைஞர்கள் முடிவெடுத்தனர். ‘பாரத்மாதா கி ஜே, வந்தே மாதரம், சுதந்திரம் நமது உரிமை நாம் அதை அடைய வேண்டும்’ என்று முழக்கம் செய்தனர்.
ஊர்வலம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, ஹேமுவின் தலைமையில் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் ஏராளமானபேர் கலந்து கொண்டனர். ஊர்வலத்துக்கு பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மாடிகளில் இருந்து தங்களுடைய மகிழ்ச்சியை மலர் தூவிவெளிப்படுத்தினர். ஊர்வலத்தில் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம், ஆங்கிலேயர்கள் ஒழிக, கலவரம் ஏற்படுத்திய அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு ஊர்வலம் அமைதியாக சென்றுகொண்டிருந்தது.
அமைதியாக சென்றுகொண்டிருந்த ஊர்வலத்தை பரங்கி படை தடுத்தது. ”எங்கு செல்கிறீர்கள்?” எனக் கேட்டான் ஆங்கில அதிகாரி ஒருவன். “நாங்கள் அமைதியாக ஊர்வலம் நடத்துகிறோம், எங்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகள், காவல்துறையினர் மன்னிப்பு கேட்க வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை நிபந்தனையற்ற ஜாமீனில் வெளியே விட வேண்டும். இந்த கோரிக்கைகளை செவி சாய்த்தால் நாங்கள் அமைதியாக சென்று விடுவோம்” என்றனர்.
கூட்டத்தினரை தடுத்த ஆங்கிலேய அதிகாரி, “நான் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது" என்றான். அப்படியானால், “நாங்கள் தொடர்ந்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்று ஹீராவும் கூறினான். “நாங்கள் தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்றனர் ஆங்கியேல சிப்பாய்கள்.
ஹேமு மற்றும் நண்பர்களோ “நாங்கள் சுதந்திர போராட்ட தியாகிகள். நம்பிக்கையோடு முன்னேறி செல்வோம்” என்றனர். வாக்குவாதங்கள் முற்றவே, தேசபக்தர்களுக்கும் ஆங்கில சிப்பாய்களுக்குமிடையே சண்டை நடந்தது. குதிரைகளில் வந்த ஆங்கிலேயர்கள், தேசபக்தர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். பலமுள்ள தேசபக்தர்கள் ஆங்கிலேயனுடைய தடிகளை, அவனிடமிருந்து பறித்து தாக்க துவங்கினர். அமைதியாக இருந்த இடம் கலவர பூமியாக மாறியது.
நிலைமையை கண்டு கோபமுற்ற ஆங்கிலேய அதிகாரி துப்பாக்கி சூடு நடத்தினான். துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்தனர். ஊர்வலத்துக்கு தலைமை வகித்து செல்லக்கூடிய ஹேமுவை பிடிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் திட்டம் தீட்டினர். போலீஸ் அவரை சூழ்ந்து கொண்டது. ஆனால் ஹேமு தன்னைத் தாக்க வந்த காவல் துறையோடு வீரமாக போரிட்டு அவர்களை விரட்டினார்.
”துப்பாக்கி சூடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. எதிரிகள் (ஆங்கிலேயர்கள்) பலமாக இருக்கின்றனர். அவர்கள் கையில் ஏராள ஆயுதங்கள் இருக்கின்றன. சூழ்நிலை மோசமாக இருக்கிறது. இருப்பினும் நிதானமாக யோசனை செய்து நாம் முன்னேற வேண்டும்" என்று ஹேமு கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து அதிகமாக போலீஸ் வரவழைக்கப்பட்டது. துப்பாக்கி சூடு நடந்தன. துப்பாக்கி குண்டு பட்டு நிலத்தில் சாய்ந்தவர்கள் மத்தியில், ஹேமுவும் ஹீராவும் தாங்களும் இறந்தது போல் மூச்சு அடக்கி படுத்துக்கொண்டனர். இவர்கள் இறந்து விட்டார்கள் என்று நினைத்து போலீஸ் துப்பாக்கிசூட்டை நிறுத்திவிட்டு, இறந்தவர்களின் உடலை அப்புறப்படுதும் வேலையை செய்தனர்.
வேலை நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இரண்டு பேரும் சாமர்த்தியமாக எழுந்து தப்பித்து ஓட ஆரம்பித்தனர். போலீஸ் பின் தொடர்ந்தது. ஓடி காடுகளில் சென்று மறைந்து கொண்டனர்.
“ஆங்கிலேயர்களின் தோட்டாக்களுக்கு எதிராக, நாம் நெஞ்சை நிமிர்த்தி பாரத அன்னைக்காக தியாகம் செய்வோம்” என ஹேமு தைரியமாக கூறினான். "நாம் தெரிந்தே மரணத்தை சந்திப்பது வீரமல்ல. அவசியம் நாம் தியாகம் செய்ய வேண்டும். நமக்கு சுதந்திரம் வேண்டும். ஆனால் அதற்கு உரிய நேரமும் சூழ்நிலைகளையும் புரிந்து அதன்படி செய்ய வேண்டும். நம்முடைய லட்சியம் வெள்ளைக்காரனை இந்த நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்பதுதான்” என ஹீரா கூறினார்.
இரவெல்லாம் மலைப்பகுதியில் ஒளிந்திருந்த ஹேமு, சற்று வெளியில் சென்று பார்த்த போது, சற்று தொலைவில் மிகுந்த அழுகை குரலும், மரண ஓலங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு வெறிபிடித்தவன் போல் அலைந்த வெள்ளைக்காரர்கள், பல அப்பாவி மக்களை சுட்டு வீழ்த்தியதுடன், வெறி அடங்காமல் ஸக்கர் நகரை தீக்கிரை ஆக்கினர். அந்த கொடுந்தீயில் பச்சிளம் குழந்தைகள், செல்வங்கள், ஆடு மாடுகள் எல்லாம் வெந்து சாம்பலாயின. ஹேமுவும் நண்பர்களும், சென்று பார்த்த பொழுது இதயத்தை உறைய வைத்த காட்சிகள் காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விவரங்கள் கேட்டபோது விசாரணை என்ற பெயரில் இரவு பொழுதில் ஆங்கிலேய சிப்பாய்கள் கிராமத்துக்குள் வந்தனர். இளம் பெண்களிடமும், திருமணம் ஆகாத பெண்களிமுடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இதற்கு வயது மூத்த பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்கள் மூர்க்கமாக தாக்கப்பட்டனர். இதனால் உதவிக்கு கிராமத்து இளைஞர்கள் அழைக்கப்பட்ட போது அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் நகரினை தீக்கிரையாக்கினர்.
”மக்கள் படும் துயரத்தைக்கண்டு கொதித்து எழுந்த ஹேமு தன் நண்பர்களுடன் இதற்கு நாம் பிரதிகாரம் செய்து தான் ஆக வேண்டும் என்றார். “செய்வோம் நிச்சயம் செய்வோம், ஆனால் அதற்கு சிறிது நம்மை நாமே தயாரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது." என்று நண்பர்கள் தெரிவித்தனர்.
“நாம் எதுவரை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்?" ஆவேசப்பட்டான் ஹேமு. நகரத்தில் ஆங்கிலேய சிப்பாய்கள் சுற்றி திரிகிறார்கள். எங்கும் மரண ஓலங்கள் கேட்கின்றன. பெண்களும், குழந்தைகளும், "காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்" என்று கதறி அழுவது கேட்கிறதே!
சிப்பாய்கள் இருக்கும் இடத்தை நோக்கி போகலாமென யோசிக்கையில், ஒரு நண்பர் ஓடிவந்து, கிராமத்து தலைவர் ஒரு ஆங்கில அதிகாரியை கொன்று விட்டதாகவும், அதன் காரணமாக கிராமத்து தலைவன் பிடிக்கப்பட்டு, அவன் காயப்படுத்தப்பட்டு, அந்த காயத்தில் உப்பும் மிளகுத்தூளும் தடவப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டதை பார்க்க முடிந்தது. அத்துடன் அவருடைய மரண ஓலம் விண்ணை பிளந்து கொண்டிருந்தது.
ஆங்கில படைகள் தாய்மார்களை, சகோதரிகளை துன்புறுத்துவதை தூரத்தில் இருந்து ஹேமு கவனித்துக் கொண்டிருந்தார். ஆங்கில சிப்பாய் கிராமத்து தலைவனின் வயிற்றில் கத்தியால் குத்தி கிழித்து கொண்டிருப்பதைப் பார்த்து, விரைந்து சென்று சிப்பாயின் கையிலியிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களை சுட்டு வீழ்த்தினார்.
ஹேமுவை பிடிப்பதற்கு சிப்பாய்கள் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர். நேருக்கு நேர் பயங்கரமான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருந்த தருணத்தில், ஹேமுவிற்கு திடீரென்று ஒரு யோஜனை தோன்றியது. துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே விழுவது போன்று நடித்தார்.
ஹேமு கீழே விழுந்ததை பார்த்த ஆங்கில சிப்பாய்கள், ஹேமு சுடப்பட்டு விழுந்தான் என்று நினைத்து ஆனந்த கூத்தாடினர். சிறிது நேரத்தில் அவர்கள் துப்பாக்கி சுடுவதை நிறுத்திவிட்டனர். ஆனால் ஹேமு தந்திரமாக எழுந்து அங்கிருந்து தப்பி எதிரில் வந்த ஆங்கிலேயர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினார். கிராமம், நகரம், வீதி, என எங்கும் ‘ஸ்வராஜ்ய சேனா ஜிந்தாபாத், வந்தே மாதரம்’ போன்ற முழக்கங்கள் எழுப்ப, நாம் நம்முடைய கடமையை செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் கொதித்து எழுந்தனர்.
சுதந்திர வேள்வி தீ எங்கும் பரவிக்கொண்டிருந்தது. ஹேமுவும் தேசபக்தர்களும் ஆங்கிலேயனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டிருந்தனர்.
இடையிடையே மகாத்மா காந்தியின் அகிம்சை முறை போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. ஆங்கிலேயரின் கொடிய செயலை கண்டு உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தான் ஹேமு. ஆங்கிலேயர்களை எதிர்க்க உரிய ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் தயார்செய்து கொண்டிருந்த வேளையில், ஆங்கிலேயர்கள் இவர்களை தீவிரவாதிகள் என்று பட்டம் கட்டி விட்டனர். சாதாரண மக்களை கொன்று குவிக்கும் ஆங்கிலேயர்களை, அவனுடைய மொழியிலேயே அவனுக்கு பதில் கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்றுகருதி, இளைஞர்களை ஒன்றுதிரட்டி, சுதந்திர வேட்கை காண தீவிர முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக, ஆங்காங்கே வெடிகுண்டுகளும் தயாரித்து வெடிக்கப்பட்டன.
ஹேமு ஆங்கிலேயர்களை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கும் சூழலில், அவரின் சித்தப்பா டாக்டர் காலானி கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்கப்பட்டது, அவரை சிறையில் இருந்து காப்பாற்ற சில முயற்சிகளும் நடந்தன. “ஹீரா! டாக்டர் காலானியை வெளியே கொண்டு வருவதற்காக நாம் சில முயற்சிகள் செய்ய வேண்டும்” என்று ஹேமு கூறினார். ஹேமுவின் நண்பர் ஹரியும், தான் கொண்டு வந்த சின்னசின்ன வெடிகுண்டுகளை எடுத்து காண்பித்து இவை அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என்றார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி காங்கிரஸ் மகாசபை மும்பையில் நடந்தது. காந்திஜியின் “செய் அல்லது செத்து மடி. ஆங்கிலேயன் பாரதத்தை விட்டு கிளம்ப வேண்டும். இது எங்களுடைய தாய்நாடு, நாம் இதில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்ற ஆவேசமான பேச்சுகள் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது. இதனால் மகாத்மா காந்தியும் சில தலைவர்களும் கூட கைது செய்யப்பட்டிருந்தனர்.
காந்திஜியும் தலைவர்களும் கைது செய்யப்பட்டதனால், மக்கள் மகாத்மா காந்திக்கு ஜே என்ற குரலுடன் ஆங்காங்கே சத்யாகிரக போராட்டங்கள் நடத்த தொடங்கினர். சில இடங்களில் ஆங்கிலேய படைகள் பின்வாங்க வேண்டி வந்தது. பல இடங்களில் பயந்து ஓட வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்பட்டன.
சிறையில் இருந்த டாக்டர் காலானி மற்றும் தேச பக்தர்களை விடுவிக்க வேண்டுமென்று ஹேமு தீர்மானித்தார். ஒரு நாள் இரவு மணி 12, அனைவரும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். வீதியெங்கும் மயான இருட்டாக இருந்தது. ஆங்காங்கே சில நாய்கள் குரைத்தபடி இருந்தன. இத்தருணத்தில் ஹேமுவும் அவரது நண்பர்களும் உரிய ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் எடுத்துக்கொண்டு சற்று கவனமாக முன்னோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சிறைச்சாலை இருக்கும் இடத்தை அடையும் முன்பு ஒரு சிப்பாய் எதிரில் வந்து நீங்கள் யார்? என்று கேட்க, பதிலுக்கு நீ யார்? என்று கேட்க விவாதம் தொடங்கிய போது ஹரி தன் கையில் இருந்த துப்பாக்கியால் சிப்பாயை பதம் பார்த்தான்.
சிறிது நேரத்தில் ஜெயில் சுற்றுச்சுவரை அடைந்தனர். போகும்போது ஹேமு அவர்களுக்கு குறிப்பு சொல்லிக் கொண்டே சென்றார். சமய சந்தர்ப்பத்தை பொறுத்து உங்கள் கையில் இருக்கக்கூடிய ஆயுதங்களை பிரயோகித்துக் கொள்ளுங்கள். யாரும் யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம் என்றார்.
சிறைச்சாலையின் கதவுகளை நெருங்கி ஹரி தன் கையில் இருந்த வெடிகுண்டை வீச முற்படும் முன்னர் ஹேமு வெடிகுண்டை வீசினார். கதவுகளும் சிறைச்சாலைகள் சுவர்களும் தகர்க்கப்பட்டன. உள்ளிருந்த சுதந்திர போராட்ட வீரர்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தனர்.
காவல்நிலையத்தில் ஒன்றிரண்டு சிப்பாய்கள் மட்டுமே இருந்தனர். அவர்களால் ஹேமு மற்றும் நண்பர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறிய போது, அதிகமான போலீஸ் வரவழைக்கப்பட்டனர். சிறைச்சாலையினுள் நடந்த பயங்கரமான போராட்டத்தில் ஏறத்தாழ 50 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
நிலைமை அவ்வாறிருக்க ஹேமு மற்றும் நண்பர்களின் கையில் இருந்த வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் குறைந்து கொண்டிருந்தது. மாறாக ஆங்கில சிப்பாய்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு தேவையான தோட்டாக்களும் தயார் படுத்திக் கொண்டே வந்தனர். ஆங்கில படையோடு நடந்த மோதலில் ஹேமுவின் இனிய நண்பர் ஹீரா கொல்லப்பட்டார். ஹேமுவும், ஹரியும் சிறைச்சாலையிலிருந்து தப்பி வேகமாக ஓடி ஒளிந்து கொண்டனர்.
ஹேமுவும், ஹரியும் ரகசிய இடத்தில் சந்தித்தனர். தன் நண்பர்களிடம், புரட்சிகரமான சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய புத்தகங்களையும் கொடுத்துவிட்டு, “யோசிக்க நேரமில்லை, நானும் ஹரியும் மட்டுமே இருக்கிறோம், நம்முடைய வேலை வேகமாக நடக்க வேண்டும்" என்று கூறி சென்று விட்டார்.
வீதியெங்கும் பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் சுதந்திர வேட்கையில் போராட்டம் நடத்தினர். பஜனைகள் பாடி அமைதியாகச் சென்ற சத்யாக்கிரகிகளை, கண்மூடித்தனமாக தாக்கி தங்கள் வெறியை ஆங்கிலேயர்கள் தீர்த்துக்கொண்டனர்.
இந்த சமயத்தில் ஒரு நண்பன் ஓடி வந்து, கமல் கைது செய்யப்பட்டதாக கூறினான். 'நாம் இருக்கும் ரகசிய இடங்கள் கமலுக்கு தெரியும். இந்த இடத்தை மாற்றிக்கொள்வோம்" என்று சொன்னதற்கு, ஹேமு சொன்னார் ”என் நண்பன் ஒருபோதும் இந்த விஷயத்தை சொல்ல மாட்டான்"
கமலை விடுவிக்க ஹேமு ஒரு தந்திரம் செய்தார். போலீஸ் உயர் அதிகாரி உத்தரவு கடிதம் போல் ஒன்றை தயார் செய்து, அதை ஹரியிடம் கொடுத்து, "இதை நீ காவல் துறை சிப்பாயிடம் காண்பித்து, கமலை தந்திரமாக அழைத்து வர வேண்டும்" என கூறினார். ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்று நண்பர்கள் கேட்க, "ஏற்படாது" என்று தைரியமாக கூறினார். குழப்பம் ஏற்பட்டால், சந்தேகம் ஏற்பட்டால் சாமர்த்தியமாக ஓடி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்புகளும் சொன்னார்.
சத்குரு பன்கண்டி மகராஜ், பஞ்சாபிலிருந்து சுற்றுப்பயணம் செய்து சிந்து பிரதேசத்துக்கு வந்தார். ஸக்கர் பகுதியின் இயற்கை வளமும், சிந்து நதியின் எழிலும், இயற்கை கொஞ்சி விளையாடிய அந்த பூமியில் ஒரு ஆசிரமம் நிறுவியிருந்தார். ஆசிரமம் இது போன்ற புரட்சி வீரர்களுக்கு புகலிடமாக இருந்தது, ஏராளமான தேசபக்தர்கள் அங்கு வந்து தங்கி இருந்தனர். ஸக்கர் பகுதியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒரு முஸ்லிம், அந்த சன்னியாசிக்கு ஆசிரமம் அளிக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டாலும், ஹிந்துக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்திலேயே ஆசிரமம் அமைக்க உதவினர்.
சிந்து பகுதியின் ஸக்கரில் நடக்கும் சுதந்திரப் போராட்டம் சற்று விசித்திரமாக இருந்தது. தன்னைத்தானே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளுதல், மனித சேவை என விசேஷமாக இருந்தது. அந்த நேரத்தில் புரட்சி வீரர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக இருந்தனர்.
பல்வேறு விதமான போராட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், என பலரும் இந்தப் போராட்டத்தில் குதித்தனர்.
ஸ்ரீ ஃபதக்ராஜ் குஜராத்தி, ஸக்கர் பகுதியின் இளைஞர்கள் தலைவராக இருந்தார். அவர் “இளைஞர்கள் பாரத சபா" என்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தி ஸ்வராஜ்ய சேனாவுடன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து கொண்டார்.
ஹைதராபாத் மற்றும் கராச்சியில் தேச பக்தர்கள் அவ்வப்போது ஒன்று கூடி, போராட்டமும் எழுச்சி உரைகளும் நடத்திக் கொண்டிருந்தனர். பல நேரங்களில் ஆசிரமத்தில் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. சுதந்திர வேட்கைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தினை பகிர்ந்தனர்.
ஹேமு புரட்சி வீரர்களை ஸ்வராஜ்ய சேனாவில் இணைக்க தேவையான முயற்சிகள் செய்து கொண்டிருந்தார். அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையைSயும் கவனிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் தொடர்ந்து செய்து வரப்பட்டன. போராட்டத்தை உறுதிப்படுத்த, மக்களுக்கு சுபாஷ் சந்திரபோஸ், திலகர், சர்தார் வல்லபாய் பட்டேல், போன்ற தலைவர்களின் படங்கள் அளிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட தலைவர்களில் ஜெயபிரகாஷ் நாராயணன் சிறையில் இருந்து, தப்பி வெளியில் வந்தார். சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய படையும், ஆசாத் ஹிந்து படையும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டிருந்தது.
சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க ஆங்காங்கே போராட்டங்கள், சிறைச்சாலை சுவர்களை உடைத்தல், ரயில் பெட்டி உடைத்தல், அலுவலகங்களுக்கு தீ வைத்தல், ஊர்வலங்கள் நடத்துதல், இப்படி பல விதமாக நடந்து கொண்டிருந்தன. ஆங்கிலப்படை எப்படியாவது புரட்சி வீரர்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஸக்கரில் அதிகமான எண்ணிக்கையில் காவலர்களும் அவர்களுக்கு தேவையான ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் ரயில்கள் மூலமாக கொண்டுவரப்பட்டன.
ஹரி நகருக்கு சென்றிருந்தபோது இந்த விஷயங்களை அறிந்து கொண்டு ஹேமுவிடம் கூறினார். ரயிலில் ஆயுதங்கள் கொண்டுவரப்படுவதை மாறுவேடத்தில் சென்று நண்பர்கள் அறிந்துகொண்டனர்.
இதனிடையே ஹேமு, தன் அம்மாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றான். மகனைக்கண்ட ஆனந்தத்தில் அம்மா "நீ ஏன் இவ்வளவு நாள் வரவில்லை, எங்கிருந்தாய்? என விசாரிக்க தொடங்கினார். ஊரில் பல்வேறு விதமான செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன” என்று கேட்கும் போது, "அம்மா நான் இந்த தேசத்தின் விடுதலைக்காக பாடுபடுகிறேன். ஆங்கிலேயர் நமது சொந்த பூமியை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து விடுதலை பெறவேண்டி நான் செய்யும் ஒவ்வொரு செயலும் தேசத்தின் நன்மைக்காகத்தான் செய்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
ஹேமுவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற தன்னுடைய தாயின் ஆசையை கேட்ட ஹேமு, “அம்மா! வெளி நாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் கூரிய ஆயுதங்கள் பாரத அன்னையின் நெஞ்சை துளைத்திருக்கிறது. ஆகவே என் தாயை காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. தாங்களோ என் திருமணத்தைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நான் என் பாரத அன்னையின் கண்ணீரை துடைக்க புறப்படுகிறேன், எனக்கு ஆசீர்வாதம் அளியுங்கள்" என்று அன்னயிடம் கேட்டார்.
அன்னை அவருக்கு ஆசீர்வாதம் அளித்து “நீண்ட நாள் நீ உயிர் வாழ்ந்து சமுதாயத்திற்கு தொண்டு செய்", உன்னுடைய மனம் எதை விரும்புகிறதோ, அதை நீ செய். அதில் வெற்றியடைவாய்" என்று வாழ்த்தினார்.
தாயின் நல்லாசியுடன் வெளியே புறப்பட்டார் ஹேமு. இரவில் ரயிலை கவிழ்த்து விட்டு, அதில் உள்ள ஆயுதங்களை கவர வேண்டும் என்ற திட்டங்கள் தீட்டப்பட்டது. ரயில்வே நிலையத்துக்கு சற்று தூரத்தில் இருக்கக்கூடிய தண்டவாளங்களை அகற்ற முடிவு செய்து ஆயுதங்கள் எடுத்து சென்று மறைத்து வைக்கப்பட்டன.
இரவு 8 மணி ஆனது. தண்டவாளங்களை அகற்றக்கூடிய வேலை செய்துகொண்டிருக்கையில், அருகில் இருக்கக்கூடிய பிஸ்கட் பேக்டரியின் காவலர் இவர்களை பார்த்துவிட்டு, காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவல் பெற்றுக் கொண்ட ஆங்கிலப்படை, மாறுவேடம் பூண்டு சாதுக்கள் சன்னியாசி போல் இவர்களை சுற்றி வளைத்தனர். நண்பர்களை தப்ப வைத்து விட்டு ஹேமு, திடத்துடன் அங்கே நின்றிருந்தான். போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. தனியாக நின்றிருந்த ஹேமு ஆங்கில படையால் சூழப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் உறவுகளும், தாயும் ஹேமுவைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை ஹேமு கைது செய்யப்பட்ட விஷயம் தெரிந்தது. ஹேமுவை காப்பாற்ற டாக்டர் மங்காரமின் வீட்டுக்கு உறவினர்கள் சென்றனர். சிறுவனாக இருப்பதால் போலீஸ் விடுதலை செய்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிந்துவில் "மார்ஷல் லா” என்னும் ராணுவ சட்டம் நடைமுறையில் இருந்தது. அதன் அடிப்படையில் ஹேமுவும், நண்பர்களும் ஆங்கிலேயர்களின் முக்கிய எதிரிகளாகவும், கலவரத்தை பரப்பக் கூடியவர்களாகவும், துரோகிகளாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.
ராணுவ சட்டப்படி சிறப்பு நீதிமன்றத்தில்தான் இவ்வகை வழக்குகள் விசாரிக்கப்படும். ஹேமு கைது செய்யப்பட்டதை அறிந்த தந்தை, உயர் காவல் துறை அதிகாரியை சந்தித்து, விடுதலை செய்ய எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
ஹேமுவின் மீது, சதி செய்தது, ரயில் தண்டவாளங்களை பெயர்த்தது, ரயிலில் பயணம் செய்த ஆங்கில அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தேசபக்தர்கள் தரப்பு வாதத்தை கேட்க ஆங்கிலேயன் தயாராகவில்லை. கை மற்றும் கால்களில் விலங்குகளால் பூட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
ஹேமு, தான் பாரத மாதாவுக்கு பூஜை செய்வது போன்று மகிழ்ச்சியுடன் நின்றுகொண்டிருந்தார். நீதிபதி விசாரணை தொடங்கினார்.
இவர் மிகவும் ஆபத்தானவர் என்றும், ஆயிரக்கணக்கான வீரர்களை கொல்லமுயற்சி செய்தார், ஆயுதங்களை கைப்பற்ற முயற்சி செய்தார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
ஆனால் ஹேமுவின் தரப்பு வக்கீல் வாதம் செய்யும்போது அவன் சிறு பையன், அறியாதவன், தாங்களே அவரை விசாரித்துக் கொள்ளலாம் என்றார்.
நீதிபதி கேட்டார்-
உன் பெயர் என்ன?
என் பெயர் புரட்சிக்காரன். நான் பாரத மாதாவின் புதல்வன்.
உன் நண்பர்களுடைய பெயர்?
பதில் "வந்தே மாதரம்"
தந்தையின் பெயர் என்ன?
"ஹிந்துஸ்தான்”
தொழில் என்ன?
"தேசபக்தியை பிரச்சாரம் செய்வது”
”நீ செய்த செயலுக்கு அதற்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு விட்டால், உன்னை விடுதலை செய்து விடலாம்” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
ஆனால் ஹேமு, "நான் பாரத மாதாவின் புதல்வன். என் அன்னையை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். என் தேச மக்கள் மீது கொடூரமாக குண்டு வீசி, துப்பாக்கி சூடு நடத்தி தேசத்துக்கு எதிராக ஆங்கிலேயர்கள் செயல்பட்டு கொண்டிருப்பதால் நான் அவர்களை வெறுக்கிறேன்" என்றார்.
நீதிபதியும் இறுதியாக, “நாட்டில் குழப்பம் ஏற்படுத்துபவர்களுக்கும், தீவிரவாதம் செய்பவர்களுக்கும் தண்டனை என்னதெரியுமா? மரண தண்டனை" என்றார்.
ஹேமு, “நீதிபதி அவர்களே! நான் குற்றவாளி அல்ல. ஆங்கிலேயர்கள்தான் குற்றவாளிகள். ஆங்கிலேயர் எங்கள் நாட்டில் இருந்து வெளியேற மறுக்கிறார்கள்” என்றார்.
நீதிபதியின் கோபம் அதிகரித்தது.
"உன் விவாதத்தை நிறுத்து. நடந்ததற்கு மன்னிப்பு கேள்”
"நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றான் ஹேமு.
"நான் தேசபக்தன். தேசபக்தர்கள் மரணத்தை கண்டு பயப்படுவதில்லை. நான் பகவத் கீதையை படித்திருக்கிறேன். அதில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், ஆத்மா நிலையானது என்றும் உடல் அழியும் தன்மையள்ளது என்று கூறியுள்ளார்".
நான் என் உயிரினும் மேலான, சொர்க்கத்தைவிட உயர்வான என் பாரதநாட்டின் விடுதலைக்காக உழைக்கிறேன். நான் இந்த மண்ணை நேசிக்கிறேன் "பாரத் மாதா கி ஜெய்" என்று உரக்கக்கூறி, சட்டப்படி நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்" என்றார்
குற்றம் சுமத்தப்பட்ட ஹேமு, சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 800 முதல் 1000 கைதிகள் வரை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஸக்கர் சிறையில் இவரும் அடைக்கப்பட்டார். ஜெயிலில் இருக்கும் கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் வாரத்துக்கு ஒரு முறை வந்து பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் ஹேமுவிற்கு மட்டும் விசேஷமாக தினசரி உறவினர்கள் வந்து பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஒரு நாள் காலையில் சிறைச்சாலையில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் நடந்தது. சிறைச்சாலையின் உயர் அதிகாரி வந்து இவரிடம் கேட்டார், “நீ தான் ஹேமுவா, நீ மிகுந்த பிடிவாகக்காரனாக இருக்கிறாயே? நாங்கள் உங்களை விடுதலை செய்யலாம் என்று நினைத்திருந்தோம். நீ பாலகனாக இருக்கிறாய்" என்று பல்வேறு விதமான உபதேசங்களை எல்லாம் சொன்னார்.
ஆனால் சிறைச்சாலையின் உயர் அதிகாரி கூறியதை எதையும் கேட்காமல் ஹேமு, "நான் என் அன்னைக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன். உங்களுடைய முகஸ்துதி விஷயங்களை நான் அறிவேன்" என்றார்.
ஜெயிலர் மீண்டும் கோபமடைந்தார், "நான் குற்றவாளிக்கு எமனை போன்றவன் என்று உனக்கு தெரியுமா?”
இவ்வாறாக பேச்சுக்கள் இருவருக்கும் நடந்து கொண்டிருந்தன. சிறைச்சாலையில் ஹேமு மூர்க்கமாக தாக்கப்பட்டான். ஆங்கிலேய சிப்பாய்கள் தாங்கள் சோர்வடையும் வரை கண்மூடித்தனமாக தாக்கினர். எவ்வளவு தாக்கப்பட்ட போதும்கூட வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தைகளும் ஹேமுவின் வாயிலிருந்து வெளி வரவில்லை.
"இவன் மிக பயங்கரமான ஒரு ஆளாக இருக்கிறான்போல தோணுது" ஜெயிலர் தனக்குத்தானே நினைத்துக் கொண்டான். தனது வாழ்நாளில் இது போன்ற ஒரு சம்பவமே நடந்ததில்லை என்றான்.
இறுதியாக ஹைதராபாத் தலைமையகத்திலிருந்து ஆங்கிலேய கமாண்டர் லாரொளி, ஹேமுவிற்கு மரண தண்டனை அறிவித்தான்.
தூக்கு தண்டனை செய்தியை கேட்ட சிந்து பிரதேச மக்களின் கண்களிலிருந்து பெருக்கெடுத்த கண்ணீர், அந்த பகுதி முழுவதும் நனைந்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது.
ஹேமுவை மன்னிப்பு கேட்பதற்கு, பலவிதத்தில் பயமுறுத்தியும் புகழ்ந்தும், ஆதரவாக பேசியும் பார்த்த போதுகூட பயனில்லை.
கடைசி நிமிடத்தில்கூட ஹேமுவின் தண்டனையைக் குறைத்து வெளி கொணரும் பொருட்டு, அவரிடம் மன்னிப்பு கடிதத்தில் கையெழுத்து போடுவதற்கு கேட்ட போது "மன்னித்து விடுங்கள். நான் கையெழுத்து போட மாட்டேன். கையெழுத்து போடுவதால் எந்த பலனும் இல்லை".
"இவ்வாறு செய்வதெல்லாம் வீண். எதற்காக நான் மட்டும் காப்பாற்றப்படவேண்டும்? தேசத்திற்காக ஆயிரம் பேர் பலிதானமாகியுள்ளனர். அவர்களைப் போல் நானும் ஒருவன். பாரத மாதாவின் துயரத்தை துடைப்பதற்காக ஆயிரம் ஆயிரம் சகோதர சகோதரிகள் தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்” என உறுதியாக தெரிவித்தார்.
சிறையில் காலையில் உடற்பயிற்சி செய்வதும், அதன் பிறகு பகவத் கீதை படிப்பதும் என அமைதியாக தன் முகத்தில் எந்த விதமான ஒரு துயரமோ சந்தேகமோ கொள்ளாமல் நிம்மதியாக தன் வேலையை செய்து கொண்டிருந்தான் ஹேமு.
"பாரத மாதாவின் வீர புதல்வன், சுதந்திரமே தனது மூச்சாக கொண்டவன், என் பாரத மாதாவின் மீது அந்நியன் கை வைத்தால் அவனை அடியோடு அழித்து ஒழித்து விடுவேன்" என்ற மாபெரும் வீரனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.
21 ஜனவரி 1943. மிகவும் உயர்ந்த நாள். “வந்தே மாதரம்" என்ற வீர முழக்கமிட்டார் ஹேமு. அந்த வீர இளைஞன் பாரத மாதாவிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.
ஹேமுவின் புனித உடல், அன்று மாலை 4:30 மணி அளவில் உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்த மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமே போய்விட்டதாக கதறி அழுதனர்.
ஹேமுவிற்காக பல தலைவர்கள் தங்கள் கண்டனத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்தி சிரத்தாஞ்சலி செய்தனர்.
"அம்மா-நான் பாரதமாதாவின் சேவைக்காக மீண்டும் பிறவி எடுப்பேன்."
26 ஜனவரி 1943 குடியரசுவிழாவில் ஹேமுவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜவஹர்லால் நேரு 1943ல் கராச்சிக்கு சென்றிருந்தபோது, ஸக்கருக்கு சென்று ஹேமு காலானியின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஆஸாத் ஹிந்த் படையை சார்ந்த கேப்டன் குர்பக்ஷ் சிங் தில்லான் அவர்கள் ஹேமுவின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவருடைய தாயாரிடம் தங்க பதக்கம் அளித்தார்.
தேசத்தின் பிரிவினைக்குப் பின்னர், சிந்துவில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டதால், ஹேமு காலானியின் குடும்பமும் டில்லியில் குடியேறினார்கள். எந்த மண்ணிற்காக ஹேமு காலானி தனது இன்னுயிரைத் தந்தானோ அந்த மண் அவனை மறந்துவிட்டது. அது பாகிஸ்தான் ஆகிப் போய்விட்டது. சிந்து நதியின் தீரத்தில் இருந்த ‘ஹேமு காலானி பூங்கா’, தற்போது பாகிஸ்தான் அரசால் ‘முகமது-பின்-காசிம்’ பூங்கா என பெயர் மாற்றம் செய்யபட்டுவிட்டது.
ஆனால் பாரதம் ஹேமுவை மறக்கவில்லை. 1983ம் ஆண்டில், அதாவது ஹேமுவின் 60ம் பிறந்த ஆண்டில் மற்றும் 40ம் தூக்கிலிடப்பட்ட நினைவு ஆண்டில், பாரத அரசாங்கம் ஹேமுவின் படத்துடன் தபால் தலை வெளியிட்டது. அதற்கான விழாவில் ஹேமுவின் தாயாரும், புரட்சி வீரன் பகத்சிங்கின் தாயாரும் அருகருகே அமர்ந்திருந்தது குறிப்பிடத் தக்கது.
இதில் விசேஷம் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள் மார்ச் 23, 1931. ஹேமுவின் பிறந்த நாள் மார்ச் 23, 1923. தேதி இரண்டும் ஒன்றே. பகத்சிங்கின் தாயார், ஹேமுவின் தாயாரிடம், “இளம் (பதின்ம) வயதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட உன்னுடைய மகன், பகத்சிங்கைவிட மேலானவன்” என்றார். சிந்தி மாதாவும், பஞ்சாப் மாதாவும் இருக்கும் புகைப்படம் செய்தித்தாள்களில் பிரபலமாக வந்தது.
2003ம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று பாரத பாராளுமன்றத்தில் ஹேமு காலானிக்கு 12 அடி உயர சிலை நிறுவப்பட்டது. இந்த ஆண்டு ஹேமு காலானியின் நூறாம் ஆண்டு கொண்டாடப் படுகிறது. சங்க நூற்றாண்டை நோக்கி சங்கப் பணியில் ஈடுபட்டுள்ள கார்யகர்த்தர்களுக்கு ஹேமு காலானியின் சாகச வாழ்க்கையும் தியாகமும் உத்வேகமளிக்கும்.
பாரத் மாதா கி ஜெய்.

.jpeg)
.jpeg)

