வ.உ. சிதம்பரம் பிள்ளை
வ.உ. சிதம்பரம் பிள்ளை
ஸ்வதேசி கப்பலை ஓட்டிய முதல் இந்தியர் (1872 - 1936)
பாரத நாட்டில் முதல் முதலில் உள்நாட்டு கப்பல் சேவையை நடத்திய வ.உ. சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்கிற பட்டப் பெயரோடு அழைக்கப்படுகிறார். இவருடைய விடுதலை போராட்ட ஈடுபாட்டினால் ஆங்கிலேயர்களால் சிறையில் இடப்பட்டு மிகக்கடுமையாக நடத்தப்பட்ட போதிலும் இவருடைய மனோதிடம் சிறிதும் குறையவில்லை. இவர் சிறையில் இருந்தபோது பல மணி நேரம் தேங்காய் நார் உரிக்கும் வேலையிலும் கயிறு திரிக்கும் வேலையிலும் ஈடுபடுத்தப்பட்டதால் அவருடைய உள்ளங்கைகளில் தோல் பிய்ந்து ரத்தம் சிந்தியது. ஆனால் இவரை கண்காணித்த சிறை அதிகாரி இவர் மீது இரக்கம் காட்டுவதற்குப் பதிலாக எண்ணெய் பிழியும் செக்கு இயந்திரத்தில் மாட்டிற்கு பதிலாக இவரை சுற்றி வரச் செய்தான். என்ன ஒரு கொடுமை! சட்டம் படித்து புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்த சிதம்பரம் பிள்ளைக்கே ஆங்கிலேய சிறையில் இத்தகையதொரு கொடுமை நிகழ்ந்தது என்றால் மற்றவர் நிலையை நாம் எண்ணிப் பார்க்கவும் முடியாது. இவ்விதமாக செக்கு இயந்திரத்தை சுற்றி வரும்போது அது பாரதமாதாவின் திருக்கோயில் ஆக நினைத்து சுற்றி வந்தேன் என்று சிதம்பரனார் குறிப்பிடுகிறார். இது அவருடைய தேச பக்தியின் வெளிப்பாடு. இத்தகைய கடுமையான சூழ்நிலைகளிலும், தண்டனைகளிலும் மனம் தளராமல் தனது இலக்கியப் பணியை சிறையிலும் செவ்வனே செய்தவர் தமிழ்ச்செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆவார். இவர் சிறையில் இருந்தபடியே எழுதிய பல தமிழ் நூல்கள் இவருக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்.
இவர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தும், நல்ல வருமானம் ஈட்டும் வழக்கறிஞர் தொழிலில் இருந்த போதும் தன் தாய் நாட்டுக்கான விடுதலை வேள்வியில் தனது செல்வம் அனைத்தையும் அவர் அர்ப்பணம் செய்து விட்டார். அவர் சிறையிலிருந்து வெளிவந்த போது மிகவும் ஏழ்மையான நிலையை அடைந்திருந்தார். ஒரு வேளைக்கு இரு வேளை உணவு கூட அவருடைய குடும்பத்திற்கு அவரால் வழங்க முடியவில்லை. இத்தகைய சோதனையான காலகட்டத்தில் மராட்டியத் தலைவர் பாலகங்காதர திலகர் இவர் மீது மிகுந்த பரிவு கொண்டு இவருடைய மாதாந்திர செலவிற்காக ஒவ்வொரு மாதமும் 50 ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தார். இத்தகைய மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் சிறையில் இருந்து விடுதலையான போது இவரை வரவேற்க இவரது உற்ற நண்பரான சுப்பிரமணிய சிவாவைத் தவிர வேறு யாரும் வரவில்லை. இருந்த போதும் அவர் யாரையும் குறை கூறவில்லை. இத்தகைய நன்றி மறந்த மக்களுக்காக தான் சிறையில் பல கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்ததே என்று மனம் வருந்தவும் இல்லை.தனது வாழ்நாள் முழுவதும் இத்தகையதொரு உயர்ந்த மன நிலையிலேயே அவர் வாழ்ந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் உலகநாதப் பிள்ளைக்கும் பரமாயி அம்மாளுக்கும் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் சிதம்பரம்பிள்ளை மகனாகத் தோன்றினார். இளம் வயதில் அவர் தனது பாட்டியாரிடமிருந்து சிவபெருமானைப் பற்றிய கதைகளையும், ராமாயணக் கதைகளையும் ஆர்வமுடன் கேட்டறிந்தார். வளர்ந்து பெரியவனாகி, சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ளும் பொழுது அதனை உதறிவிட்டு விடுதலைப் போராட்ட வேள்வியில் சிதம்பரம்பிள்ளை தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். 1892 ஆம் ஆண்டிலிருந்து சிதம்பரம் பிள்ளை அவர்கள் லோகமான்ய பாலகங்காதர திலகர் அவர்களால் மிகவும் கவரப்பட்டு அவருடைய சீடரானார். அவர் தனது நண்பர்களான சுப்பிரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதியார் ஆகியோரோடு இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் மக்களை எழுச்சி கொள்ளச் செய்தார்.
அச்சமயத்தில் சிதம்பரனார் பிரிட்டிஷ் இந்திய கம்பெனியின் ஏகாதிபத்திய கொள்கையை எதிர்த்து முதல் முதலாக இந்திய நாட்டு மக்களுக்கு சொந்தமான சுதேசி கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார். இந்த சுதேசி கப்பல் கம்பெனி பொருளாதார அளவில் மிகவும் பலமாக அமைந்திட அகில இந்திய அளவில் சுற்றுப் பிரயாணம் செய்து இந்த கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்று மிகப்பெரிய மூலதனத்தை உருவாக்கினார். இதற்காக சிதம்பரனார் ஆங்கிலே கப்பல் கம்பனியின் பலமான எதிர்ப்புகளுக்கு ஆளாக நேர்ந்தது. இந்த முயற்சியில் அவர் தனது சொத்துக்களை எல்லாம் இழந்தார்.
சிதம்பரனாரின் எழுச்சிமிகு சுதந்திரப்போராட்ட நடவடிக்கைகளுக்காக அவர் மீது தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டு 40 வருடங்களுக்கான இரட்டை ஆயுள் தண்டனையை நீதிமன்றம் அவருக்கு வழங்கியது. சிதம்பரனாரின் எழுச்சி மிகுந்த போராட்ட உத்திகளால் மிகவும் கலவரமடைந்த ஆங்கிலேய நிர்வாகமானது அவரை எவ்விதமாகவாவது தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தை மனதில் கொண்டே இத்தகையதொரு கடுமையான சிறை தண்டனையை அவர் பெற்றிட காரணமாக அமைந்தது. சிதம்பரனாரின் நண்பர்கள் பெரும் தொகை ஒன்றை திரட்டி அவரை சிறையிலிருந்து பிணையில் விடுவித்திட முயற்சி செய்தனர். ஆனால் சிதம்பரனார் அவருடைய நண்பரான சுப்பிரமணிய சிவாவும் மற்றும் ஏனைய நண்பர்களும் சிறையில் வாடும் பொழுது தான் மட்டும் பிணையில் வெளியே வருவது சரியாக இருக்காது என்பதனால் இந்த ஏற்பாட்டிற்கு அவர் உடன்படவில்லை. வலிய சிறைத்தண்டனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார். இதனைக் கேள்விப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த புரட்சி வீரரான அரவிந்த கோஷ் அவர்கள் சிதம்பரனாரின் முடிவை பாராட்டி அவருக்கு உற்சாகம் அளித்தார். அவருக்கு மக்களின் ஆதரவு இருந்த போதிலும் தனது சகாக்கள் சிறையில் வாடுவதால் தானும் சிறைவாசத்தை மேற்கொள்கிறேன் என்கிற அவருடைய முடிவை மிகப்பெரிய அரசியல் முதிர்ச்சி என்று அரவிந்த கோஷ் வர்ணித்தார். சென்னை மாகாணம் இத்தகையதொரு ஆண்மை மிக்க தலைவரை உருவாக்கி சரித்திரம் படைத்த உள்ளதாகவும் அரவிந்தர் பெருமை கொண்டார்.
யாரொருவர் சிதம்பரம் பிள்ளையின் தொடர்பில் வந்தாலும் அவர் ஒரு சிறந்த தேச பக்தராக மாறிவிடுவது அவரின் சிறப்பை விளக்குவதாக அமைகிறது அவர் தனது வாழ்நாளில் நூற்றுக்கணக்கான மக்களை தேச பக்தி உணர்வு கொள்ளச் செய்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்துள்ளார். உதாரணத்திற்கு சிதம்பரனாரின் தொடர்பிற்கு வந்த முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் தனது மகனுக்கு "வந்தே"என்றும் மகளுக்கு "மாதரம்" என்றும் பெயர்சூட்டி யார் அவர் வீட்டுக்கு வந்தாலும் தனது குழந்தைகளை "வந்தேமாதரம்" என்று பெயர் சொல்லி அழைத்து மகிழ்வது மட்டுமல்லாமல் வந்திருக்கும் விருந்தினரையும் இவ்விதமாகவே வந்தேமாதரம் என்று சொல்ல வைத்து மகிழ்ச்சி அடைவார். இவ்விதம் சாமானிய மக்களாக விளங்கிய செருப்பு தைப்பவர், விவசாயி, முடி திருத்துபவர் ஆகிய அடித்தட்டு மக்களும் சுதந்திர வேட்கையோடு விளங்குவதற்கு சிதம்பரனாரின் நட்பும் தொடர்பும் தூண்டுகோலாக விளங்கியது.