விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம்

விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம்

பாரதத்தின் தெற்குக் கோடியில் கடல் நடுவே உள்ள பாறையில் எழுந்து நிற்கிறது பிரம்மாண்டமான ஒரு நினைவுச் சின்னம். இது பாரதத்தாயின் தனிப்பெரும் தவப்புதல்வன் சுவாமி விவேகானந்தரின் நினைவாக அமைக்கப்பட்டது. நாமெல்லோரும் இதன் அழகையும் கம்பீரத்தையும் பலதடவை பார்த்திருப்போம். அந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதன் வரலாறு மற்றும் அதன் பின்னே உள்ள மாபெரும் மனிதரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். சுவாமி விவேகானந்தர் குருதேவரின் மகா சமாதிக்கு பிறகு தன்னந்தனியாக பாரத தேவியின் விஸ்வரூபத்தை தரிசிக்க பாரததேசம் முழுவதும் வலம் வந்தார். அப்போதே 1893 செப்டம்பர் மாதம் நடைபெறப் போகும் அமெரிக்கா சிகாகோ நகர் சர்வ சமய மாநாட்டை பற்றி கேள்விப்பட்டு இருந்தார். ஆனால் அவர் எந்த வித முடிவுக்கும் வரவில்லை. 1892 டிசம்பர் 25ஆம் தேதி கன்னியாகுமரி வந்தார். கடல் நடுவே உள்ள பாறைக்கு நீந்தியே சென்று அங்கு மூன்று நாட்கள் தவம் செய்தார். அந்தப் பாறை கன்னியாகுமாரி அம்மன் ஈசனை நோக்கி தவம் செய்த பாறை. சுவாமிஜி அந்தப் பாறையில் தவம் செய்து எதிர்காலப் பயணத்திற்கு ஒரு தெளிவான முடிவுக்கு வந்து, அதன்படி செயலாற்றத் தொடங்கினார். சுவாமிஜி பிறந்தது 1863 ஜனவரி 12. 1962 ஆண்டு முதல் அவருடைய நூற்றாண்டு விழாக்கள் நாடெங்கும் நடைபெற்றன. அரசாங்கம் 1963-64 ஆண்டினை சுவாமிஜியின் நூற்றாண்டாக அறிவித்தது

இந்த நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த சில பெரியோர்கள், விவேகானந்தர் தவம் செய்த பாறையில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் வேண்டும் என்று விரும்பி ஒரு குழு ஒன்றை ஆரம்பித்தனர். கேரளத்தைச் சேர்ந்த மன்னத்து பத்மநாபன் என்பவருடைய தலைமையில் அந்த குழு உருவானது. நினைவு சின்னம் அமைப்பதில் முதல் சிக்கல் அந்தப் பாறையை கத்தோலிக்க கிருத்துவர்கள், சவேரியார் பாறை என்று சொந்தம் கொண்டாடி வந்தனர். அங்கு மீன்களை காயவைப்பது வலைகளைப் பழுது பார்ப்பது போன்ற பணிகளை நடத்திக் கொண்டிருந்தனர். இந்துக்கள் நினைவுச்சின்னம் வைக்க முயற்சிக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனே அங்கு ஒரு சிலுவையையும் நட்டார்கள். அது மதரீதியான பிரச்சனைக்கு வழிவகை என்று அப்போதைய முதலமைச்சர் திரு பக்தவச்சலம் அந்தப் பாறையில் நினைவுச் சின்னம் அமைப்பதை விரும்பவில்லை. ஆனால் ஹிந்துக்கள் தீவிரமாக இருந்தார்கள். கன்னியாகுமாரியில் இது விஷயமாக சுவாமி சின்மயானந்தா, பரம பூஜனீய குருஜி கோல்வல்கர் மற்றும் நினைவுச்சின்ன குழுவினர் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதில் எப்படியாவது நினைவுச்சின்னம் அமைப்பது என்று முடிவாகியது. அப்போதே சின்மயானந்தா ரூபாய் 10,000 முதல் நன்கொடையாக வழங்கினார். நினைவுச் சின்னம் அமைப்பதற்கு குமரி மாவட்டம் அளவில் முயற்சி செய்தால் போதாது, அதை அகில இந்திய அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்த நினைவுச்சின்ன குழுவினர், நாக்பூருக்கு சென்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ குருஜியை மறுபடியும் சந்தித்து ஆலோசனை கேட்க விரைந்தனர்.

அப்போது சங்கத்தின் அகில பாரத சர்கார்யவாஹ் பொறுப்பிலிருந்து திரு ஏக்நாத் ரானடே, அ.பா பௌத்திக் ப்ரமுக் பொறுப்புக்கு மாற்றப் பட்டிருந்தார். ஏக்நாத் ஜி இதற்கு முன் சில ஆண்டுகள் கல்கத்தாவில் தங்கியிருந்து சுவாமிஜியின் நூல்களை ஹிந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதை வெற்றியாக நடத்தியிருந்தார். விவேகானந்தர் நினைவுச் சின்னம் அமைக்கும் பணிக்கு துணை செய்ய, ஏக்நாத் ஜி அனுப்பப் பட்டார். 1963 ஆகஸ்ட் 16 ஆம் தேதி அன்று விவேகானந்தர் நினைவுச் சின்ன குழுவின் அமைப்புச் செயலாளர் ஆனார் ஏக்நாத் ரானடே. திரு மன்னத்து பத்மநாபன் தலைவராகவும், திரு வி மகாதேவன் செயலாளராகவும், திரு ஆர் சங்கரன் இணைச் செயலாளராகவும் கொண்ட குழு அது. அன்றைய தினத்திலிருந்து 1970ஆம் ஆண்டு நினைவுச் சின்னம் திறக்கப்பட்ட தினம் வரை அவருடைய உழைப்பு சொல்ல முடியாதது. அதை நிறைவேற்றுவதற்காக அவர் செயல்பட்ட முறை ஒவ்வொரு சங்க கார்யகர்த்தரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த வேலையைத் துவங்கிய உடனேயே அவர், கல்கத்தா ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த மாதவானந்த மஹராஜ் அவர்களை முதலில் சந்தித்தார். அவர் தன்னுடைய பூரண ஆசிகளை வழங்கினார். அதன்பின் நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ள பாறையை பார்வையிட்டார். கன்னியாகுமரி மற்றும் சென்னையில் பல கூட்டங்களை நடத்தினார்.

தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் நினைவு சின்னம் அமைப்பதை விரும்பவில்லை. அதற்கு பதில் இது விவேகானந்தர் பாறை என்று அறிவிப்பு பலகையை நிறுவினார். அதையும் கிறித்துவர்கள் உடைத்து கடலில் வீசினர். ஆகவே எதிலும் அக்கறை காட்டவில்லை. ஏக்நாத் ஜி டெல்லி சென்று திரு லால்பகதூர் சாஸ்திரியை சந்தித்து விவரம் சொன்னார். சாஸ்திரிஜி மற்ற உறுப்பினர்கள் மந்திரிகளின் கையொப்பமிட்ட மனு சமர்பிக்கப்பட்டால், நானும்  முயற்சிக்கிறேன் என்றார். அப்போதைய கல்வி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஹீமாயூன் கபீரை ஏக்நாத் ஜி சந்தித்தார். அமைச்சர் முதலில் மறுத்தாலும் ஏக்நாத்ஜி தன்னுடைய அறிவார்ந்த பேச்சினாலும் விவாதங்களினாலும் அவரை சம்மதிக்க வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர்களில் பனாரஸ் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ரகுநாத் சிங் கையெழுத்தை முதலில் வாங்கினார். அவருடைய கையெழுத்தை பார்த்துவிட்டு ஒரு மணி நேரத்தில் 90 காங்கிரஸ் உறுப்பினர்கள் கையெழுத்திட்டு விட்டார்கள். சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோஹியா, கம்யூனிஸ்ட் தலைவர் ரேணு சக்ரவர்த்தி, ஜனசங்கத்தைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த சி.என்.அண்ணாதுரை முதலானோர் கையெழுத்திட்டனர். சுமார் ஒரு மாதம் கழித்து லால்பகதூர் சாஸ்திரியிடம் 323 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை கொண்ட மனுவை சமர்ப்பித்தார் ஏக்நாத்ஜி. பிரமித்துப் போன சாஸ்திரிஜி அவருடைய முயற்சியால் பிரதமர் நேருவின் அனுமதியும் கிடைத்தது.

இதற்குப் பிறகும் தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம் தயக்கம் தீரவில்லை. யாரிடம் சொன்னால் முதல்வர் கேட்பார் என்ற நுணுக்கத்தை தெரிந்துகொண்டார் ஏக்நாத் ரானடே. உடனடியாக நினைவுச்சின்ன தலைமை ஸ்தபதியுடன், காஞ்சிபுரம் சென்று பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து நினைவுச்சின்ன விவரத்தை விளக்கினார். சுவாமிகளும் மனப்பூர்வமாக ஆசியளித்தார். சுவாமிகள் அனுமதியும் கிடைத்தது என்று முதலமைச்சரை பார்த்து ஏக்நாத் ஜி சொன்ன மறுநிமிடமே, எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் தனது அனுமதியை எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார் முதலமைச்சர்.

இப்படியாக சட்டபூர்வமாக நினைவுச்சின்னம் சுவாமிஜியின் திருவுருவச்சிலையோடு நிலைநிறுத்த அனைவரின் அனுமதியையும் பெற்றுவிட்டார். அந்தப் பாறை கன்னியாகுமரி அம்மன் தவம் செய்த ஸ்ரீபாத பாறை என்றும் அழைக்கப்பட்டதால், திருவாங்கூர் தேவசம்போர்டு இந்தப் பாறை தேவசம்போர்டுக்கு சொந்தமானது என்று தெரிவித்த ஆட்சேபணையையும் சட்டபூர்வமாக முறியடித்தார். நினைவு மண்டபத்தின் அப்போதைய திட்ட மதிப்பீடு ரூ 30 லட்சம். இந்தப் பெரிய தொகையை திரட்டுவதில் ஏகனாத்ஜியின் இன்னொரு திறமை வெளிப்பட்டது. இந்த நினைவு மண்டபம் மக்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பதால், பெரிய தொகை வசூல் செய்தாலும் பாமரர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதால் ரூ 1, ரூ 3, ரூ 5 -க்கான அட்டைகளை வினியோகித்து பல லட்சம் ரூபாய்கள் வசூல் செய்தார். இந்த வகையில் வசூலிக்க நாடெங்கும் உள்ள ஸ்வயம்சேவகர்கள் உதவினர்.

ரூபாய் 30 லட்சம் சிறிய தொகை அல்ல. அதைத் திரட்ட ஏக்நாத்ஜி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். மாநில அரசாங்கங்கள், அரசு அமைப்புகள் அனைத்தையும் நாட முடிவு செய்தார். ஒவ்வொரு மாநிலமும் ஒரு லட்சம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏகநாத்ஜியின் நெருங்கிய நண்பர்களான பிர்லா சகோதரர்கள் முதலில் ஏகநாத்ஜியின் இந்த முயற்சியை விரும்பவில்லையானாலும், அவருடைய தீவிர முயற்சியை கண்டு வியந்து அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் கொடுத்தனர். மேற்குவங்க உதவி முதலமைச்சர் ஜோதிபாசு சம்மதிக்கவில்லை. ஆனாலும் அவருடைய மனைவி பொது மக்களிடமிருந்து வசூலித்து கொடுத்தார். நாகாலந்து முதலமைச்சர் திரு.ஹோகிஷே ஸேமா-வைக் காணச் சென்றார். அவரோ நீங்கள் தவறான இடத்தைத் தேடி வந்திருக்கிறீர்கள் எனவும், தாங்கள் ஏற்கனவே மத்திய அரசின் உதவியில் இருப்பதாகவும் கூறினார். நாகாலாந்தில் யாருக்கும் விவேகானந்தரை பற்றி தெரியாது. அதனால் இங்கு நிதி திரட்ட முடியாது என்றார். அவரிடம் விவேகானந்தரின் உரை அடங்கிய புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொன்னார். ஏகநாத்ஜியின் திறமையான வாதங்களை கேட்ட நாகாலாந்து முதலமைச்சர் உடனே 15,000 வழங்கி, மீதி பணம் 85 ஆயிரம் அனைத்து மாநிலங்களும் தந்தவுடன் தருகிறோம் என்று உறுதிமொழி கொடுத்தார். இந்த காலகட்டத்தில் ஹரியானா மாநிலம் உருவாகி இருக்கவில்லை. பஞ்சாபுடன் சேர்ந்துதான் இருந்தது. பஞ்சாப் முதல்வரிடம் ரூபாய் ஒரு லட்சம் வாங்கினார். விரைவிலேயே ஹரியானா மாநிலம் பிரிக்கப்பட்டு விட்டது. உடனே ஹரியானா முதல்வரிடமும் ரூபாய் ஒரு லட்சம் வாங்கினார்.

நிதி திரட்டுவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்தாலும் அடிக்கடி கன்னியாகுமரி வந்து நினைவு மண்டப கட்டிட வேலைகளை நுணுக்கமாக கவனித்துக்கொண்டார். ஏறக்குறைய 650 தொழிலாளர்கள் வேலை செய்தனர். நினைவு மண்டபம், ஸ்ரீபாத மண்டபம் முதலியவைகளின் கலை நுணுக்கம் ஆசார விதி முதலியவைகளை காஞ்சி பரமாச்சாரியாரோடு பேசி அவருடைய ஆலோசனைக்கு ஏற்ப அமைத்தார். ஏகநாத்ஜியின் அபார உழைப்பின் விளைவால் பாரத தேசத்தில் உள்ள அனைத்து அரசியல் அமைப்புகள், அதன் தலைவர்கள், சமூக இயக்கங்கள் அனைவரும் தங்களது பரிபூரண ஒத்துழைப்பு நல்கினர். ஆறு ஆண்டுகளாக கட்டப்பட்ட நினைவு மண்டபம் 1970-ஆம் ஆண்டு ஜனாதிபதி திரு.வி.வி.கிரி அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி, ராமகிருஷ்ண மடத் தலைவர் வீரேஸ்வரானந்த மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுவாமிஜியின் பணி ஒரு கட்டிட அமைப்பாக மட்டும் இருந்துவிட முடியாது. அது லட்சோப லட்சம் மக்களுக்கு நிரந்தர பணியாற்றவும் வேண்டும் எனக் கருதிய ஏக்நாத்ஜி, ஸ்ரீ குருஜியின் அனுமதியுடன் 1972 ஜனவரி 7ம் தேதி ஆன்மீக, சமூக அமைப்பாக விவேகானந்த கேந்திரத்தைத் துவக்கினார். ஏக்நாத் ரானடே என்ற மாபெரும் மனிதரின் தீவிர முயற்சியாலும், அயராத உழைப்பினாலும், நெடு நோக்கு பார்வையாலும், சுவாமி விவேகானந்தரின் புகழ் ஜோதி கன்னியாகுமரியிலிருந்து பாரதம் முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது.


Popular posts from this blog

பெரிய கதைகள்