டாக்டர் ஜி சிறை சென்ற நூற்றாண்டு
டாக்டர் ஜி சிறை சென்ற நூற்றாண்டு
டாக்டர்ஜியின் துணிவும், தன்னம்பிக்கையும்:-
அது ஒரு கோர்ட் அறை. மிகவும் பரபரப்பான சூழ்நிலை. நாள் 1921 ஜூன் 14. நீதிபதியின் ஸ்தானத்தில் நீதிபதி ஸ்மேலி என்கிற வெள்ளைய நீதிபதி அமர்ந்திருக்கிறான். விசாரணைக் கூண்டில் டாக்டர் ஜி நின்றிருக்கிறார். ஆம், நமது பரம பூஜனிய ஆத்ய சர்சங்கசாலக் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் தான் அவர். ஆனால் அப்போது அவர் சங்கத்தை இன்னும் தொடங்கவில்லை. காங்கிரஸ் இயக்கத்தின் அறைகூவலை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்கும் பொதுக்கூட்டங்களில் அனல் பறக்கப் பேசி வந்தார் டாக்டர் ஜி. 1920 அக்டோபர் மாதம் காடோல் தாலுக்கா பொதுக்கூட்டத்திலும், காடோல் பர்கானா பொதுக்கூட்டத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று டாக்டர் ஜி நிகழ்த்திய உரைகளின் ஆதாரத்தில் அன்றைய வெள்ளை அரசு வழக்கு தொடுத்து இருந்தது.
டாக்டர் ஜிக்காக வழக்கறிஞர் போபடே வழக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார். அன்று இன்ஸ்பெக்டர் ஆபாஜி சாட்சியம் அளிக்க வந்தார். அவரை போபடே குறுக்கு விசாரணை செய்தார். ஆனால் வழக்கறிஞரை குறுக்கு விசாரணை செய்ய முடியாத வண்ணம் நீதிபதி ஸ்மேலி இந்த கேள்வி கேட்க முடியாது, இந்த கேள்வி சம்பந்தமில்லாதது, இது பொருத்தமில்லாத கேள்வி என்று குறுக்கீடு செய்து கொண்டே இருந்தார். போலீஸ் அதிகாரியை பார்த்து, "ஹிந்துஸ்தானம் ஹிந்து மக்களுடையது என்றுதானே டாக்டர் ஹெட்கேவார் தனது உரையில் குறிப்பிட்டார்", என்று போபடே கேட்டார். ஆனால் ஆங்கிலேய நீதிபதி இந்த கேள்வியை குறிப்பில் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டார். இவ்விதம் பாரபட்சமாக வழக்கு விசாரணைக்கு குறுக்கீடு செய்யும் விதமாக ஆங்கிலேய நீதிபதி நடந்துகொண்டதால் மிகவும் எரிச்சலுற்று வழக்கறிஞர் போபடே இந்த வழக்கை நடத்த இயலாது என்று நீதிமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் ஜி யும் அவரது வழக்கினை வேறு நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி விண்ணப்பிக்க போவதாகச் சொல்லி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
வழக்கறிஞர் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டதால் டாக்டர் ஜி தனது வழக்கில் வாதிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு குறுக்கு விசாரணையில் இறங்க தீர்மானித்தார். அவர் ஒருபோதும் சட்டம் பயின்றவர் அல்லர். நீதிமன்றத்தில் முதல் அனுபவம். ஆனால் அவருக்கு என்ன பயம் அவரோ நீதிமன்றத்தை பிரிட்டிஷ் ஆட்சி முறை, ஏகாதிபத்தியம், கபடமான நீதி அமைப்பு இவற்றிற்கு எதிராக அரசியல் விளக்க உரை நிகழ்த்தும் அரங்கமாக்க விரும்பி அவ்வாறே செய்தும் காட்டினார்.
நீதிபதியை கிண்டலடித்து அவர் தன் வாதத்தை தொடங்கினார். ஒரு நீதிபதியை தகுதியற்றவர், விவரமற்றவர், பொருத்தமற்றவர் என்று அறிவிக்கும் துணிவு ஒரு தீவிர தேசியவாதிக்குத்தான் இருக்க முடியும். டாக்டர் ஜியும் அந்த அச்சமற்ற உணர்வை, தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார். நீதிபதியை மாற்ற வேண்டுமென்று தான் கொடுக்க இருக்கிற விண்ணப்பத்தின் மீது தீர்ப்பு கிடைக்கும் முன் தன் வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தடுக்கவேண்டும் என்று நீதிபதி ஸ்மேலியை டாக்டர் ஜி கேட்டுக்கொண்டார். அவமானத்தால் ஸ்மைலி திகைத்துப் போனார். நீதிமன்றம் டாக்டர்ஜியின் கோரிக்கையை ஏற்றது. டாக்டர் ஜி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி இரவின் முன் ஜூன் 25 அன்று இதுகுறித்து மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் ஒரு புதுமையான விஷயம் என்னவெனில் ஓர் ஆங்கிலேய நீதிபதி தன் வழக்கை நடத்தத் தகுதியற்றவர் என்று ஒரு இந்தியர் புகார் செய்திருக்கிறார். நீதிபதி இர்வின் எந்த மாதிரி தீர்ப்பளிப்பார் என்று எல்லோருக்கும் புரிந்து இருந்தது. ஆனால் ஸ்மேலியை முன்னிட்டுக் கொண்டு ஆங்கிலேயர்களின் நீதி அமைப்பை தாக்குவதுதான் டாக்டர்ஜியின் நோக்கம். அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவிக்கும் பொழுது, "நீதிபதிக்கு மராட்டி மொழி அன்றாடப் பயன்பாட்டிற்கான அளவு கூட தெரியாது. சொற்பொழிவும் சரி, வாக்குமூலமும் சரி, மராட்டியில் உள்ளது. அவர் இந்த வழக்கைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை. எனவே அவர் இந்த வழக்கை நடத்தப் பொருத்தமானவர் இல்லை. நீதிபதி வழக்கு விசாரணை குறித்து எழுதும் தாள் வெள்ளையாக இருந்ததே இதற்கு சாட்சி. ஜூன் 14 ஆம் தேதி நீண்ட விவாதம், குறுக்கு விசாரணை வெகுநேரம் நடந்தது. என்றாலும் அவரால் ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை. அதுமட்டுமல்ல, நீதிபதி ஒரு அரசியல் ஞான சூனியம்!! அவரால் அரசியலை புரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் அவர் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கேட்கும் கேள்விகளை எல்லாம் ஆட்சேபித்த வண்ணம் இருந்தார். அந்தக் கேள்விகள் ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், அரசுத் தரப்பு சாட்சி அவற்றிற்கு பதில் தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தால் எனது சொற்பொழிவில் ராஜத்துரோக அம்சம் எதுவும் இல்லை என்று நிரூபணமாகி இருந்திருக்கும் என்று காரசாரமாக ஆதாரத்துடன் நீதிபதி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை டாக்டர் ஜி அடுக்கியிருந்தார். தனது வழக்கறிஞர் போபடேவை குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் குறுக்கீடு செய்த நீதிபதி ஸ்மேலியை இதன் மூலம் டாக்டர்ஜி நன்றாக பழிவாங்கினார். இப்போதைய பாஷையில் சொல்வதானால் டாக்டர்ஜி நீதிபதி ஸ்மேலியை நன்றாக வச்சு செய்தார். நன்றாக பங்கம் செய்தார். இருப்பினும் நீதிபதி ஸ்மேலி வழக்கை நடத்துவதற்கு முழுத் தகுதி பெற்றவர் என்று கூறி ஜூன் 27ஆம் தேதி டாக்டர் ஜியின் மனுவை நீதிபதி இர்வின் எதிர்பார்த்தபடியே தள்ளுபடி செய்தார். ஓர் ஆங்கிலேய அதிகாரியை எவ்வாறு இன்னொரு அதிகாரி விட்டுக் கொடுப்பான்!!
டாக்டர்ஜிக்கு சிறைவாசம்:-
பிறகு டாக்டர் ஜி தனது வழக்கை அவரே முன் நின்று வாதிட்டார். போலீஸ் அதிகாரியான கங்காதர ராவை குறுக்கு விசாரணை செய்யும்போது அவர் சுருக்கெழுத்தில் டாக்டர் ஜியின் உரையை குறிப்பெடுக்கும்பொழுது நிமிடத்திற்கு 25 அல்லது 30 வார்த்தைகள் மட்டுமே அவரால் எழுத முடிகிறது என்பதைக் கூறினார். ஆனால் டாக்டர் ஜியோ நிமிடத்திற்கு 200 வார்த்தைகள் பேசக்கூடிய திறன் பெற்றவராக இருக்கும்போது அதை எவ்விதம் போலீஸ் அதிகாரி சரியாக குறிப்பு எடுத்திருக்க முடியும் என்று மடக்கினார். அதுமட்டுமின்றி அந்த போலீஸ் அதிகாரி வீட்டில் அவருடைய தாயாரிடம் தெலுங்கிலும் மனைவியிடம் கொச்சையான மராட்டியிலும் பேசுபவர். மிகவும் குறைவான மொழியறிவு கொண்டிருக்கக்கூடியவர், அதுமட்டுமன்றி அவர் பள்ளிப்படிப்பில் இன்டர் தேர்வில் தோல்வி அடைந்தவர். இவ்வளவு அறிவு குறைவான, மொழி அறிவு அற்ற, எழுதுவதில் வேகம் இல்லாத ஒரு போலீஸ் அதிகாரி எவ்விதம் தனது உரையை முழுவதுமாக குறிப்பு எடுத்து இருக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டி சர்க்கார் தரப்பு வாதங்கள் அனைத்தும் கற்பனையில் தயாரிக்கப்பட்டவை என்பதை அவர் மிகவும் சாதுரியமாக எடுத்துரைத்தார்.
மேலும் டாக்டர் ஜி தனது நாட்டின் விடுதலைக்காக நாட்டு மக்களை எழுச்சி பெறும் நோக்கத்துடன், தான் பேசிய அனைத்து விஷயங்களும் தேசிய விடுதலைக்கான விஷயம்தான் என்றும் அதில் தேசத்துரோகமோ, வன்முறையோ இல்லை என்றும் வாதாடினார். சுதந்திர உணர்வை ஊட்டுவது ஒரு தேசபக்தனின் கடமை என்று அவர் தனது நிலையில் மிகவும் உறுதியாக இருந்தார். அவருடைய அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, டாக்டர் ஜி வெளியில் ஆற்றிய சொற்பொழிவை விட, நீதிமன்றத்தில் அவர் தந்த வாக்குமூலம் பல மடங்கு ராஜதுரோகமாக உள்ளது என்று தீர்ப்பு கூறினார். ஆகவே அவருக்கு ஒரு வருட காலம் சொற்பொழிவு நிகழ்த்த கூடாது என்கிற தடையும், ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு ஜாமின் தொகைகளும், மேலும் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு பிணைத்தொகையும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்புச் சொன்னார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த டாக்டர் ஜிக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். டாக்டர் ஜி புன்முறுவல் பூத்த முகத்துடன் சிறைத் தண்டனையை ஏற்றுக் கொண்டார். 1921 ஆகஸ்ட் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று டாக்டர் ஜி சிறை சென்றார்.
டாக்டர் ஜி சிறை செல்லும் முன் தன்னை வழியனுப்ப வந்திருந்த கூட்டத்தினரிடையே பேசிய பேச்சு அன்று நிலவிய அரசியல் மனப்பான்மையின் மீதான தாக்குதலாக இருந்தது. சிறை செல்வது தான் கவுரவம், அதற்குத்தான் மதிப்பு, அதுதான் தேசியவாதம் என்று நினைத்துக் கொள்ளும் பிரமையை அவர் விவேகத்துடன் கண்டனம் செய்தார். அவசியம் ஏற்பட்டால் தான் சிறை செல்ல வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. ஏகாதிபத்தியத்துடன் போரிட சிறைக்கு வெளியே இருந்து செயல்படுவதால் தேசபக்திக்கு பங்கம் ஏற்பட்டு விடாது என்பது அவருடைய கருத்து. சிறைக்கு வெளியே இருந்த படி கூட கணிசமான பங்களிப்பு செய்ய முடியும் என்றார். "சுதந்திரப்போராட்டத்தில் பணிபுரிந்து கொண்டு சிறை செல்ல நேரிட்டால் அவசியம் செல்லுங்கள். ஆனால் நமது லட்சியம் சிறை செல்வதில் இல்லை. அது தேச சேவையாக இருக்க வேண்டும்", என்று அவர் சிறை செல்லும் முன்பு குறிப்பிட்டார்.
சிறைச்சாலை அனுபவங்கள்:-
டாக்டர் ஜி நாகபுரியில் உள்ள அஜனி சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்தார். இந்தச் சிறையில் இவரைத் தவிர இன்னும் நான்கு கிளர்ச்சியாளர்கள் கடுங்காவல் தண்டனை அனுபவித்து வந்தார்கள். அவர்கள் ரகுநாத் ராமச்சந்திர பாடக், பண்டிட் ராதாமோகன் கோகுல் ஜி, வீர் ஹர்கரே, இனாமுல்லா கான் ஆவார்கள். பாடக் வழக்கறிஞர் தொழில் புரிந்தவர். எளிமையான சுபாவம் உடையவர். வீர் ஹர்கரே தீவிரமான தேசியவாத ஆதரவாளர். பண்டிட் கோகுல்ஜி தீவிர ஆரிய சமாஜத்தின் உறுப்பினர். இனாமுல்லா கான் தீவிர முஸ்லிம். கிலாபத் இயக்கத்தின் ஆதரவாளர். கடுங்காவல் சிறை வாசத்தின் போது எல்லா கைதிகளும் வெவ்வேறு விதமான வேலைகள் தரப்பட்டன.
வழக்கறிஞர் பாடக் திரிகைக் கல்லில் மாவரைக்கும் வேலை செய்தார். டாக்டர் ஜிக்கு உற்பத்தியாகும் காகிதத்தை தேய்த்து, தேய்த்து பாலிஷ் ஏற்றும் வேலை தரப்பட்டது. அவரது கைகளில் காப்பு காய்த்து கொப்புளம் ஏற்பட்டது. ஆனால் அவர் தன் தண்டனையை குறைக்கும் படி சிறை அதிகாரிகளிடம் கேட்கவில்லை. தனது தகுதிக்கு இந்த வேலை மிகவும் பொருத்தமற்றது என்று சொல்லிக்கொண்டிருக்கவும் இல்லை. காய்ப்பு காய்த்த கைகளோடு காகிதத்தை தேய்க்கும் வேலையை அவர் நேர்மையுடன் தொடர்ந்து செய்தார்.
சில நாட்களுக்குப் பிறகு சிறை அதிகாரி டாக்டர் ஜிக்கும் அவரது நண்பர்களான நான்கு கைதிகளுக்கும் புத்தக பைண்டிங் வேலை அளித்தான். விதவிதமான சுபாவம் கொண்டவர்கள் மத்தியில் டாக்டர்ஜியின் சிறைவாசம் தொடர்ந்தது. அவர்களுக்கு இடையில் சர்ச்சை துவங்கி கைகலப்பில் முடியும் போதெல்லாம் டாக்டர் ஜி நல்லிணக்கம் ஏற்படுத்தி சரி செய்வார்.
இனாமுல்லா கான் சிறைக்கு வந்த இரண்டாம் நாள் அதிகாலை சேவல் கூவும் முன்பாக மிக உரத்த குரலில் குர்ஆன் ஆயத்துக்களை ஓதத் தொடங்கினான். பாடக் ஜியும், ஹர்கரேவும், "நீங்கள் குர்ஆன் படிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் பிறருக்கு இடைஞ்சலாக உரத்த குரலில் ஏன் ஓத வேண்டும் என்று அவனிடம் கேட்டார்கள். இதை இனாமுல்லா ஏற்றுக்கொள்ளவில்லை. மறுநாளிலிருந்து பண்டிட் ராதாமோகன் துளசிதாசர் எழுதிய ராமாயணப் பாடல்களை மிக உரத்த குரலில் பாடத் துவங்கினார். அவரது ஓங்கிய குரலுக்கு முன் இனாமுல்லாவின் குரல் எடுபடவில்லை. அதன்பிறகு இனாமுல்லா இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை. கிலாபத் இயக்கம் முஸ்லிம்கள் மத்தியில் எந்தளவிற்கு மதமாற்றும் வேகத்தினை அதிகரித்து இருந்தது என்பதற்கு இனாமுல்லா ஒரு உதாரணம். அவன் பாடக்ஜிக்கும், டாக்டர் ஜிக்கும் இஸ்லாத்தின் பெருமையை போதிக்க முயற்சி செய்தான். பண்டிட்ஜி ஆரிய சமாஜத்தை சார்ந்தவர். எனவே இனாமுல்லா அவரிடம் செல்லவில்லை. இனாமுல்லாவின் முயற்சி தொடரும்போது டாக்டர் ஜீ தன் புன்முறுவலால் முற்றுப்புள்ளி வைத்திடுவார்.
டாக்டர்ஜியின் அனைவரையும் ஈர்க்கும் பண்புநலன்:-
டாக்டர் ஜி அப்போது மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்று சிறை சென்று இருந்தார். எனினும் சிறையில் ஏதேனும் காரணம் கண்டுபிடித்து வேலைநிறுத்தம் செய்வது அவரது சுபாவத்தில் இல்லை. 1922 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி நாடு முழுவதிலும் "ஜாலியன்வாலாபாக்" நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறைச்சாலையில் டாக்டர் ஜி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தபோது இனாமுல்லாவும் தானும் அதில் பங்கேற்பதாக அறிவித்தான். இனாமுல்லா இதற்கு முன் கிலாபத் தவிர வேறு எதற்காகவும் போராட்டத்தில் ஈடுபாடு கொள்ளாதவன். டாக்டர் ஜி மனதில் ஜாலியன்வாலாபாக் படுகொலை மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருந்தது. டாக்டர்ஜியுடன் சேர்ந்து ஐவரும் சிறையில் அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதற்குரிய தண்டனையையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இவ்விதம் மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் தன் வசம் ஈர்ப்பதில் டாக்டர் ஜி வல்லவராக இருந்தார்.
கடுங்காவல் தண்டனையில் டாக்டர் ஜிக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஒரு போதும் அவர் முகத்தில் சோர்வின் அறிகுறியே தென்படவில்லை. தினந்தோறும் டாக்டர் ஜி மற்ற கைதிகளுக்கு மகாபாரதத்தில் இருந்து ஒரு கதை சொல்லுவார். மகாபாரதத்தின் சம்பவங்களை, பாத்திரங்களை, செய்யுள்களை உள்ளத்தை கொள்ளை கொள்ளும் விதத்தில் வெகு சரளமாக அவர் வழங்கி வந்தார். சிறை அதிகாரி கர்னல் நீலகண்ட ராவ் ஜடார்-கூட டாக்டர் ஜியின் சாத்வீகமான பண்பினால் ஈர்க்கப்பட்டான். அவன் டாக்டர்ஜியிடம் கூறும்போது "உங்களைப் பார்த்தால் அரசியல் கைதி போல தெரியவில்லை. சமய நெறியில் தோய்ந்த முனிவர் போல தோற்றம் அளிக்கிறீர்கள்", என்றான்.
ஜடார் கொடூரத்திற்கு பெயர் போனவன். ஆனால் அந்த ஒரு வருடத்தில் அவன் டாக்டர் ஜியின் நடத்தை, தேசபக்தி இவற்றால் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்தின் மீது அனுதாபம் கொண்டவன் ஆனான். அவன் டாக்டர் ஜியின் அபிமானி ஆகிவிட்டான். சிறையிலிருந்து டாக்டர் ஜி விடுதலை ஆன பின்பும் நீலகண்டராவ் ஜடார், டாக்டர் ஜியை அவரது வீட்டில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தான். இதன் மூலம் தொடர்புக்கு வந்த அனைவரையும் இணைத்தது டாக்டர் ஜியினுடைய பேரன்பு பொங்கிய இதயம்.
டாக்டர்ஜியின் விடுதலை:-
டாக்டர் ஜி தனது தண்டனைக் காலம் முடிந்து 1922 ஜூலை 12ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டதற்காகவும், கிராமம் கிராமமாக எழுச்சிமிக்க உரையாற்றியதற்காகவும் சிறை சென்ற டாக்டர் ஜி ஒரு வருட கடுங்காவல் தண்டனைக்குப் பிறகு விடுதலையானார். ஓராண்டு சிறைவாசத்தில் அவரது எடை கிட்டத்தட்ட 12 கிலோ கூடியிருந்தது. எந்த சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருப்பது டாக்டர் ஜியின் இயல்பாக இருந்தது. எனவே சிறைச்சாலையில் அவரது எடை அதிகரித்தது. சிறைச்சாலை சீருடையை கழற்றி விட்டு அவரது சொந்த ஆடைகளை அவர் அணியும்போது அவை அளவில் சிறியதாக ஆகிவிட்டிருந்தன.
அடை மழையிலும் நாகபுரி அஜனி சிறைச்சாலை வாசலில் ஆயிரக்கணக்கானவர்கள் டாக்டர் ஜியை வரவேற்க காத்திருந்தனர். டாக்டர் மூஞ்சே, டாக்டர் பராஞ்சபே, டாக்டர் நா.பா.கரே என மாகாண காங்கிரஸின் எல்லா முக்கிய தலைவர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் அணிவித்த பூமாலைகளை டாக்டர் ஜி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். வீடு சென்று அடையும் வரை நடுநடுவே வீதிகளில் நிறுத்தி டாக்டர் ஜிக்கு வரவேற்பு உபசாரம் நடைபெற்றது.
டாக்டர் ஜி விடுதலையான அன்று "மகாராஷ்டிர" பத்திரிக்கையில் "டாக்டர் ஜீயின் தேசபக்தி எல்லா விவாதங்களுக்கும் அப்பாற்பட்டது. சிறை வாசத்தின் போது அவர் தனது லட்சியப் பற்றை நிரூபித்தார். அவர் செய்த அசாதாரண தியாகத்தால் பிறவியிலேயே அமைந்து இருந்த அவரது தேசபக்தி பிரகாசித்தது. அவருடைய சிறை வாழ்க்கை முற்றிலுமாக களங்கமற்று விளங்குகிறது", என்று செய்தி வெளியிட்டது. அன்று மாலை நாகபுரியில் டாக்டர் ஜியை வரவேற்க பெரும் கூட்டத்திற்கு ஏற்பாடாகியிருந்தது. பண்டிட் மோதிலால் நேரு, ஹக்கீம் அஜ்மல் கான், டாக்டர் அன்சாரி, ராஜாஜி, கஸ்தூரிரங்க அய்யங்கார் ஆகிய தலைவர்கள் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்காக நாகபுரி வந்திருந்தனர். அவர்களும் அன்று மாலை நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு வருகை புரிந்தனர். டாக்டர் ஜி தனது ஏற்புரையில், "ஒரு வருட காலம் அரசாங்க விருந்தாளியாக இருந்ததாலேயே என்னுடைய தகுதி அந்தஸ்து உயர்ந்து விடவில்லை. அப்படி உயர்ந்து இருந்தது என்றால் அதற்காக அரசுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்", என்று மிகவும் தன்னடக்கமாகவும், யதார்த்தமாகவும் பேசினார்.
சிறைவாசம் டாக்டர் ஜி மனதில் ஏற்பட்ட தாக்கம்:-
உண்மையில் டாக்டர் ஜிக்கு இதுபோல தனிநபருக்கு விழா எடுப்பது, மாலை போடுவது எல்லாம் அவரது சுபாவத்திற்கு பொருந்திப் போகாத விஷயம். இது அவரது பிற்கால வாழ்விலும் வெளிப்பட்டது. தியாகம், நாட்டுப்பற்று, பலிதானம் என்றெல்லாம் சொல்லப்படுவது பாரத மக்களின் சகஜமான தன்மையாக இருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது.
டாக்டர் ஜியின் ஒரு வருட சிறை வாசத்திற்கு பிறகு மறுபடியும் தேசிய இயக்கத்தில் அவர் மும்முரமாக இறங்கியபோது அரசியல் சூழ்நிலை அடியோடு மாறி இருப்பதைக் கண்டார். 1922 பிப்ரவரி 5ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற ஊரில் கிளர்ச்சியாளர்கள் போலீஸ் நிலையத்தை தாக்கி 21 சிப்பாய்களையும், ஒரு அதிகாரியையும் கொன்று, போலீஸ் நிலையத்தை தீக்கிரையாகினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெற முடிவெடுத்தார். ஒத்துழையாமை இயக்கம் வாபஸ் பெறப்பட்டதால் கிளர்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். மனம் தளர்ந்தனர்.
இதுமட்டுமின்றி முஸ்லிம்கள் மனநிலையிலும் தேச விரோதப் போக்கு வளர்ந்து இருந்தது. வந்தே மாதரம் கோஷமிட்ட முஸ்லிம்கள் அல்லாஹு அக்பர் என முழங்கினர். பொதுக்கூட்டங்களில் முல்லா மெளல்விகள் காபிர்களை வதம் செய்வது மற்றும் ஜிகாத் ஆணை பிறப்பிக்கும் குர்ஆன் ஆயத்துக்களை படித்தனர். கிலாபத் இயக்கத்தினை அலி சகோதரர்கள் போன்றோர் நடத்தும்போது வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதில் தமது திறமையை வெளிப்படுத்தியதற்காக மௌலானா பட்டம் அலி சகோதரர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆச்சரியம் என்னவெனில் படித்த முஸ்லிம்கள் மத்தியில் கூட தாங்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள், மேம்பட்டவர்கள் என்னும் எண்ணம் வெளிப்பட்டது. மேலும் கேரளாவில், மலபார் பகுதியில் முஸ்லிம் மக்கள் மூலமாக ஹிந்துக்களுக்கு விரோதமாக ஆயுதம் ஏந்தி அராஜகத்தில் ஈடுபட்ட கொடுமையான மாப்ளா கலவர சம்பவம் நடைபெற்றது. எப்படியாவது முஸ்லிம்களை தாஜா செய்து, உடன் அழைத்துச் செல்லும் பாதையை காங்கிரஸ் தலைவர்கள் தேர்ந்தெடுத்து இருந்தனர். எனவே மாப்ளா கலவரத்தின் பயங்கரத் தன்மையை அவர்கள் மக்களுக்கு அறிவிக்கவில்லை.
டாக்டர் ஜி மேம்போக்காக தெரியக்கூடிய விஷயங்களிலிருந்து சூழ்நிலை குறித்து தீர்மானிக்காமல் முஸ்லிம்களுடைய அடாவடித்தனத்திற்கும், ஹிந்துக்களுடைய கோழைத்தனத்திற்குமான காரணங்களை வேரிலிருந்து ஆரம்பித்து முழுவதுமாக ஆராயத் தொடங்கினார். பாற்கடலை கடைவது போன்று டாக்டர் ஜியின் சிந்தனை தொடர்ந்தது. அதற்கு மத்தியிலும் அவருடைய சமுதாய, தொண்டுப் பணிகள் தொடர்ந்து நடந்தன. அத்தருணத்திலும் புதுப்புது முயற்சிகள், புதுப்புது அனுபவங்கள், புதுப்புது ஊழியர்கள் சமுதாயத்திலிருந்து பெற்றிட டாக்டர் ஜி தொடர் முயற்சி மேற்கொண்டிருந்தார். இத்தகைய சம்பவங்களின் தாக்கத்தாலும், ஹிந்து சமுதாயத்தின் சுய மறதி, தன்னம்பிக்கை அற்ற சூழ்நிலையை மாற்றிடவும் ஏதாவது செய்யப்பட வேண்டும் என்கிற உந்துதல் டாக்டர்ஜியின் மனத்தில் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தன. டாக்டர் ஜி பிற்காலத்தில் சங்கத்தை தொடங்குவதற்கான முக்கிய காரணங்களாக அவருடைய சிறை வாழ்க்கை அனுபவங்களும், அப்போதைய அரசியல் சூழ்நிலைகளும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.
[மேலும் விபரங்களுக்கு…. ஸ்ரீ நானா பால்கர் எழுதி, மானனீய வன்னியராஜன் ஜி அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்த “டாக்டர் ஹெட்கேவார் வாழ்க்கை வரலாறு” என்ற புத்தகத்தில் அத்தியாயம் 43 முதல் 64 வரை (பக்கம் 153 முதல் 205 வரை)]